அ.தி.மு.க.வை எப்படியும் கைப்பற்றியாக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் சசிகலா. சமீபகாலமாக, பொதுவெளியில் அரசியல் செய்து வருகிறார் அவர். அதன் முதல் கட்டமாக, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளை பார்வையிட்டு மக்களுக்கு நிவாரண உதவிகளை செய்து வருகிறார் சசிகலா. சென்னை மாவட்டத்தில் மட்டும் 15-க்கும் மேற்பட்ட பகுதிகளுக்குச் சென்று நிவாரண உதவிகளை வழங்கிய அவர், நேற்று (23.11.2021) செங்கல்பட்டு மாவட்டப் பகுதிகளுக்கு விசிட் அடித்திருக்கிறார்.
இந்தப் பயணத்தின் போது எம்.ஜி.ஆர். குடும்பத்தினரை தன்னுடன் அழைத்துச் செல்ல விரும்பி, எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள்களில் ஒருவரான லதா ராஜேந்திரனின் மகன் குமார் ராஜேந்திரனை தன்னுடன் அழைத்து சென்று வருகிறார் சசிகலா. நிவாரண உதவிகளை வழங்கும் அனைத்து இடங்களிலும் சசிகலாவுடன் குமார் ராஜேந்திரனும் இருக்கிறார்.
ராமாவரம் தோட்டத்தில் உள்ள காதுகேளாதோர் பள்ளி, எம்.ஜி.ஆர்.- ஜானகியம்மாள் கலைக்கல்லூரி, தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லம் ஆகியவை குமார் ராஜேந்திரனின் பராமரிப்பிலும் பாதுகாப்பிலும் உள்ளது.
எம்.ஜி.ஆர்.விசுவாசிகளையும், எம்.ஜி.ஆர். குடும்பத்தையும் எடப்பாடி கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கும் நிலையில், அவர்களை சசிகலா ஆரவணைக்கத் துவங்கியிருக்கிறார். எம்.ஜி.ஆர். குடும்பமும் சசிகலாவை முன்னெடுக்கிறது. இந்தநிலையில், சசிகலாவின் இந்த அரசியலை உன்னிப்பாக கவனிக்கிறாராம் எடப்பாடி.