Skip to main content

'கைதுக்கு வாய்ப்பில்லை?'-சீமானிடம் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தொடரும் விசாரணை

Published on 28/02/2025 | Edited on 28/02/2025
'No chance of arrest' - Seeman's interrogation to be completed shortly


நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னை ஏமாற்றியதாக அவர் மீது நடிகை விஜயலட்சுமி  புகார் அளித்திருந்தார். அதன் பின்னர் அவர் இந்த வழக்கை திரும்ப பெற்றுக்கொண்டார். இருப்பினும், விஜயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்தியத் தண்டனை சட்டம் 376வது பிரிவின்படி வழக்குப்பதிவு செய்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில், இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சீமான் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான வழக்கு கடந்த 17ஆம் தேதி (17.02.2025) நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை 12 வாரத்தில் முடிக்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக நேற்று சீமான் நேரில் ஆஜராகும்படி வளசரவாக்கம் போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். தொடர்ந்து சீமான் ஆஜராக மறுத்த நிலையில் இன்று ஆஜராக போலீசார் அறிவுறுத்தி இருந்தனர். இந்நிலையில் சீமான் இன்று இரவு ஆஜராக இருப்பதால் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சுமார் 200 மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டனர். அதேபோல் பேரிகார்டுகள் அமைக்கும் பணியும் நடைபெற்றது.

வளசரவாக்கம் தேவிகுப்பம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் குவிந்துள்ளனர். ஒருவேளை நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டால் கைது செய்ய வாகனங்களும் கொண்டுவரப்பட்டது. இதனால் அங்கு அதிகப்படியான போலீசார் குவிக்கப்பட்டனர். இதில் அவரிடம் 53 கேள்விகளுக்கு பதில் பெற போலீசார் திட்டமிட்டுள்ளனர். தொண்டர்கள் குவிந்தது, போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு  இடையூறுகளுக்கு இடையே இரவு 10 மணிக்கு சீமான் ஆஜராகியுள்ளார்.

ஆஜராகியுள்ள சீமானிடம் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். அவரிடம் கோயம்பேடு காவல் இணை ஆணையர் அதிவீரபாண்டியன் மற்றும் வளசரவாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செம்பேடு பாபு ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் முன்னதாக சீமான் இன்று கைது செய்யப்பட வாய்ப்பிருக்கிறது  என தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் 30 நிமிடங்களில் விசாரணை முடிந்து சீமான் வீட்டுக்கு அனுப்பப்பட இருப்பதாகவும், மீண்டும் ஒரு முறை சம்மன் அனுப்பப்பட்டு அவரிடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இன்று நடைபெற்ற விசாரணையில் சீமான் அளித்த பதில்கள் எழுத்து பூர்வமாகவும், வீடியோ கட்சியாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. தற்போது ஒரு மணி நேரத்திற்கு மேலாக சீமானிடம் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்