தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியாகக் கனமழை பொழிந்துவந்த நிலையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்துவந்தது. இதன் காரணமாகச் சேலம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துவந்தது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு 119 அடி நிரம்பியிருந்த நிலையில், மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்டு 88 ஆண்டுகளில் 41வது ஆண்டாக அதன் முழு கொள்ளளவைக் கடந்த 14ஆம் தேதி எட்டியது. இன்று (16.11.2021) காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 34,000 கனஅடியிலிருந்து 40,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120.10 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 93.63 டிஎம்சி ஆக அதிகரித்துள்ளது. மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக தற்போது அணையிலிருந்து நீர் திறப்பு 300 கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று அதிகாரிகளுடன் சேர்ந்து மேட்டூர் அணைக்குச் சென்று ஆய்வு செய்தார். ஏற்கனவே முல்லைப் பெரியாறு குறித்த பிரச்சனைகள் பேசுபொருளாகியிருக்கும் நிலையில், இன்று மேட்டூர் அணையில் நடைபெற்ற ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் துரைமுருகன், ''எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்திலேயே முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக உரிமைகள் விட்டுக்கொடுக்கப்பட்டன. முல்லைப் பெரியாறு அணையைப் பலப்படுத்த அத்தனை முயற்சிகளையும் திமுக அரசுதான் மேற்கொண்டது. தமிழகத்தின் நீர் ஆதாரங்களைப் பாதிக்கும் வகையில் கேரளா, கர்நாடகா என யார் அணை கட்டினாலும் அனுமதிக்க மாட்டோம். புதிய அணையைக் கட்ட அதிமுகவும் சரி திமுகவும் சரி அனுமதிக்காது'' என்றார்.