அரசியல்வாதிகளுக்கு மத்தியில்தான் நாற்காலிப் போட்டி நடப்பது வழக்கம். ஆனால் இப்போது அதிகாரிகளுக்கு நடுவே நாற்காலிப் போட்டி நடப்பதாக கூறிவருகின்றனர். மகாபலிபுரத்தில் பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்து பேசிய பிறகு, சீன அதிபரும், மோடியும் உட்கார்ந்திருந்த நாற்காலிகள் இப்போது மதிப்பு வாய்ந்ததாக மாறியுள்ளது. மோடியின் பாதுகாப்பு அதிகாரிகள், அந்த இரண்டு நாற்காலிகளையும் தங்களோடு டெல்லிக்கு எடுத்து செல்வதற்கு திட்டம் போட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த விஷயத்தை அறிந்த வருவாய்த் துறை அதிகாரிகள், இதை முதல்வர் எடப்பாடியின் கவனத்துக்குக் கொண்டு எடுத்து சென்றுள்ளார்கள். இதை கேள்விப்பட்ட எடப்பாடி நாற்காலியை கொடுக்க வேண்டாம். அது நமக்கு நினைவுச்சின்னம் என்று கூறியிருப்பதாக சொல்கின்றனர். அதனால் அந்த டெல்லி அதிகாரிகள் வெறும் கையோடு திரும்பி சென்றுள்ளார்கள். இந்த நிலையில் காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா, இரு நாட்டுத் தலைவர்களும் சந்தித்தது காஞ்சிபுரம் மாவட்டத்தில் தான். அதனால், அந்த நாற்காலிகளை எங்களுடைய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே நினைவுச் சின்னமாக வைக்க போகிறோம் என்று தன் பங்கிற்கு கூறியுள்ளார். இதனால் அதிகாரிகள் மத்தியில் மோடி, சீன அதிபர் உட்கார்ந்து சென்ற நாற்காலியை எந்த இடத்தில் வைப்பது என்று போட்டி நிலவுவதாக கூறுகின்றனர்.