
அமைச்சர் பொன்முடியைக் கண்டித்து முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி தலைமையில் விருதுநகரில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார் ராஜேந்திரபாலாஜி. திமுக அமைச்சர்கள் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து பெண்களை இழிவாகப் பேசிவருகின்றனர். இந்த விஷயத்தில் திமுக தலைவர், திமுக அமைச்சர்கள் மற்றும் திமுக கூட்டணியில் உள்ள கட்சியினர் அனைவருமே மௌனமாக இருக்கிறார்கள். அதேநேரத்தில், மற்ற அனைத்துக் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். முதல்வரின் கட்டுப்பாட்டில் எந்த ஒரு அமைச்சரும் இல்லை. திமுக கட்சியே முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது. திமுக அமைச்சர்களிடையே ஈகோ இருக்கிறது. திமுக கட்சிக்குள் குழப்பம் உள்ளது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பொன்முடியைக் கைது செய்து அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்திருக்க வேண்டும்.
நீட் தேர்வைக் கொண்டு வந்தது காங்கிரஸ். அதற்குத் துணை போனது திமுக. நீட் தேர்வு வேண்டுமென்று நீதிமன்றத்தில் வாதாடியவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம். சொன்னது எல்லாம் காங்கிரஸ் கட்சி, செய்தது எல்லாம் திமுக . ஆனால், அதிமுக மீது பழிபோடுகிறார்கள். 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து ஐந்து அமைச்சர்களை மத்திய அமைச்சரவையில் வைத்திருந்தபோது, திமுகவுக்கு பாஜக கூட்டணி இனித்தது. தற்போது பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் மக்கள் மத்தியில் பிரளயம் ஏற்பட்டுள்ளது.
திமுகவினர் பதட்டத்தில் இருக்கின்றனர். இந்தப் பதற்றத்தின் காரணமாக திமுக ஆட்சியில் எதிர்க்கட்சியினரின் தொலைபேசியை ஒட்டுக்கேட்பது நடக்கிறது. அரசியலில் கேவலமாக எதையும் செய்வார்கள். இதெல்லாம் திமுக ஆட்சியில் சாதாரணமாக நடப்பதுதான். திமுகவினர் கீழ்த்தரமாக அரசியல் செய்யக் கூடியவர்கள். அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தே வாழ்பவர்கள். திமுகவின் நாடகம் இனி தமிழகத்தில் எடுபடாது. திமுக கூட்டணியில் உள்ள எந்தக் கட்சியும் முழு மனதுடன் அங்கு இல்லை. அங்கு உள்ள அனைவருமே சூழ்நிலைக் கைதிகளாக உள்ளனர். அந்தக் கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சியினரும் மனவேதனையில் உள்ளனர். எந்த நேரத்திலும் திமுக கூட்டணி உடையும்” என்றார்.