
தமிழக சட்டப்பேரவையில் 2025 - 2026ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி (14.03.2025) தாக்கல் செய்தார். இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின. இதனையடுத்து வேளாண் பட்ஜெட்டை, வேளான் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கடந்த 15ஆம் தேதி (15.03.2025) தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து துறை ரீதியான மானியக் கோரிக்கை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சட்டப்பேரவையில் அதிமுக இன்று (25.04.2025) கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், “டெல்டா பாசனத்திற்காக ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் திருச்சி தஞ்சாவூர் மாவட்டங்களில் 5 ஆயிரத்து 21 கி.மீ. தூரத்திற்குப் பாசன கால்வாய்கள் முன்னுரிமை அடிப்படையில் தூர் வார முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தூர் வாரும் பணிகள் மே மாத்திற்குள் முடிக்கப்பட்டு ஜூன் மாதம் மேட்டூர் அணை திறக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு டெல்டா விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், மேட்டூரில் ‘மேட்டூர் அணை’ என்று அழைக்கப்படும் ஸ்டான்லி நீர்த்தேக்கம் கடந்த 1925ஆம் ஆண்டு துவங்கி 1934ஆம் ஆண்டு கர்னல் டப்ள்யூ. எம். எல்லீஸ் என்பவரின் வடிவமைப்பின்படி ரூ 4.5 கோடி மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்டது. இந்த அணை கட்டப்பட்ட சமயத்தில் இதுதான் உலகிலேயே உயரமான நேர்கோட்டில் அமைந்த நீர்த்தேக்கமாக விளங்கியது. இந்த அணையின் மூலம் தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களில் சுமார் 16.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் பல மாவட்ட பொதுமக்களின் குடிநீர் மற்றும் தொழிற்சாலைகள் பயன்பாட்டிற்காகவும் தண்ணீர் எடுத்துப் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.