தமிழக தோ்தல் திருவிழா நடந்து முடிந்த நிலையில், வேட்பாளர்களின் 25 நாட்கள் சூறாவளி பிரச்சாரத்தில் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெற்றன. அதில், மிக முக்கியமான தொகுதிகள் பட்டியிலில் அதிமுக அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.
அதில், திருச்சி சட்டமன்றத் தொகுதியில் உள்ள கிழக்கு தொகுதியில் கவனம் செலுத்தபட்டது. இங்கு திமுக, அதிமுக, அமமுக என மும்முனை போட்டி நடைபெற்றது. இதில் அமமுகவின் கழகப் பொருளாளரும், திருச்சி வடக்கு மாவட்டக் கழக செயலாளருமான ஆர்.மனோகரன், தோ்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் கட்சி தொண்டா்கள் யாரும் இல்லாமல் தப்பு அடிக்கும் நபா்களோடு மட்டுமே வாக்கு சேகரித்ததாக தகவல் கிடைத்தது.
அதற்கான காரணம் குறித்து விசாரித்ததில், அமமுகவின் திருச்சி மாநகர் மாவட்டக் கழகச் செயலாளராக இருந்த ஜெ.சீனிவாசன், தோ்தல் அறிவிப்புக்கு ஓரிரு நாட்கள் இருக்கும்போது, வெல்லமண்டி நடராஜன் தலைமையில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், திடீர் கட்சித் தாவலுக்கு ஆர்.மனோகரனும் ஓர் காரணம் என்பது தெரியவந்துள்ளது. அவர்கள் இருவருக்கும் சுமுகமான உடன்பாடு இல்லாததாலும், சீனிவாசன் தொடர்ச்சியாக ஒதுக்கப்பட்டு வருவதாலும் இந்தக் கட்சித் தாவல் நடந்ததாக சொல்லப்படுகிறது.
இதுஒருபுறம் இருக்க, தற்போது ஜெ.சீனிவாசன் இல்லாத நிலையில், அவா் வகித்த மாநகர் மாவட்டக் கழகச் செயலாளா் பொறுப்பு காலியாக உள்ளது. அதோடு, அதன் பொறுப்பாளராக ஆா்.மனோகரனே கண்காணித்து வருகிறார். ஆனால், தற்போது அவா் கட்சிக்காரா்களை அருகில் சோ்ப்பது இல்லை என்றும், கட்சியில் இருக்கும் பொறுப்புகளை வழங்குவதில் தொடர்ந்து பாகுபாடு காட்டுவதோடு, காலியாக உள்ள மாநகர் மாவட்டக் கழகச் செயலாளா் பொறுப்பை யாருக்கும் விட்டுக்கொடுக்காமல், அவரே வைத்துள்ளதாகவும் கட்சியினா் புலம்புகின்றனா்.
எல்லா பதவிகளையும் அவரே வைத்துக்கொண்டால் நாங்கள் எதற்கு அவருக்கு உழைக்க வேண்டும் என்று கேள்வியும் எழுப்பியுள்ளனா். மாநகர் மாவட்ட பொறுப்பை இவர் வைத்துக்கொண்டிருக்கிறார். ஏன் கட்சியில் அதற்கு தகுதியான ஆட்கள் இல்லையா? என்றும், அவா் மாநில அளவில் பொறுப்பில் இருக்கும்போது ஏன் இதை விட்டுத்தரக்கூடாது? என்றும் கட்சியினர் முணுமுணுத்துள்ளனா்.
இதன் வெளிப்பாடுதான் தோ்தல் சமயத்தில் பலர் தோ்தல் பிரச்சாரத்திற்கு செல்லவில்லை என்றும், அதிலும் கடைசிநாள் கட்சியனா் யாரும் செல்லாமல், வேட்பாளராகிய ஆர்.மனோகரனும், தப்பு அடிக்கும் குழுவும் மட்டுமே வாக்கு சேகரிக்க சென்றுள்ளனா். “அவா் வெற்றிபெற நாங்கள் ஏன் எங்களுடைய உழைப்பை வீணடிக்க வேண்டும். கட்சியில் உழைப்பதே, நமக்கு நாளை ஒரு நிலையான பதவி கிடைக்கும் என்பதற்காகதான், அப்படி இருக்கும்போது இவா் மட்டுமே அந்தப் பதவியையும் வைத்துக்கொள்வது முறையற்றது. எனவே ஆா்.மனோகரனுக்கு எதிரான எங்களுடைய எதிர்ப்பை தோ்தல் பிரச்சாரத்தில் காட்டியுள்ளோம்” என்று அமமுகவினா் புலம்பி தீா்க்கின்றனா்.