Skip to main content

“சீரிய கருத்துகளைத் துணைக்கொண்டு களமாடுவோம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 24/04/2025 | Edited on 24/04/2025

 

CM MK Stalin says Let us take the field with the support of serious ideas

முரசொலி நாளேட்டின் முன்னாள் ஆசிரியரும், எழுத்தாளருமான முரசொலி செல்வம் (வயது 82) உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 10ஆம் தேதி (10.10.2024) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கலைஞரின் மகள் செல்வியின் கணவரான செல்வம் முரசொலி மாறனின் சகோதரரும் ஆவார். திமுகவின் முரசொலி நாளிதழின் நிர்வாக ஆசிரியராக இருந்த அவர், 50 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி முரசொலி நாளிதழை மேம்படுத்தியவர்.

முரசொலி செல்வத்துடைய மறைவுக்கு பல்வேறு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து திமுக தலைமை அலுவலகமான சென்னை  தேனாம்பேட்டையில் அமைந்துள்ள அண்ணா அறிவாலயத்தின் கலைஞர் அரங்கில் முரசொலி செல்வத்தின் உருவப் படத்தைத் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கடந்த அக்டோபர் மாதம் 21ஆம் தேதி (21.10.2024) திறந்து வைத்தார். இந்நிலையில் முரசொலி நாளிதழ் வளாகத்தில் முரசொலி செல்வத்தின் சிலை இன்று (24.04.2025)  திறந்ந்து வைக்கப்பட உள்ளது.

இது தொடர்பாக திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “திராவிட இயக்கத் தளகர்த்தர் ஏ.டி. பன்னீர்செல்வத்தின் நினைவாகப் பெயர் சூட்டப்பட்டு, பேரறிஞர் அண்ணாவின் காலந்தொட்டு, மாணவப் பருவத்தில் இருந்து மறையும் வரை கட்சியில் பயணித்து, எனக்கு ஒரு மூத்த சகோதரனாக இருந்து வழிநடத்திய மதிப்பிற்குரிய முரசொலி செல்வத்தின் பிறந்தநாளான இன்று மாலை, 35 ஆண்டுகள் அவர் ஆசிரியராகப் பயணித்த முரசொலி வளாகத்தில் அவரது திருவுருவச் சிலை திறந்து வைக்கப்படுகிறது. அவரது 'சிலந்தி கட்டுரைகள்' நூல் வெளியிடப்படுகிறது. சீரிய அவரது கருத்துகளைத் துணைக்கொண்டு களமாடுவோம், வெல்வோம்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்