
தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக அதிமுகவில் கட்சி பணிகள் மேற்கொள்ள 82 மாவட்ட பொறுப்பாளர்களை அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நியமித்திருந்தார். அதில் முன்னாள் அமைச்சர்களான பொன்னையன், தம்பிதுரை, செம்மலை, வளர்மதி, கோகுல இந்திரா, வைகைச் செல்வன், செஞ்சி ராமச்சந்திரன் உள்ளிட்டவர்களின் பெயர் இடம்பெற்றிருந்தது.
இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் தான் வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவும், பாஜகவும் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மற்றொருபுறம் பாஜகவுடன் மீண்டும் அதிமுக கூட்டணி வைத்ததற்கு அக்கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் எனப் பலரும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழகத்தின் எம்.ஜி.ஆர். மாளிகையில், இன்று (25.04.2025 - வெள்ளிக்கிழமை) மாலை 04.30 மணிக்கு, அதிமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் எனப் பலரும் கலந்துகொள்ள உள்ளனர். பாஜக -அதிமுக இடையே கூட்டணி உறுதியான பிறகு நடைபெறும் முதல் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இதுவாகும். இதனைத் தொடர்ந்து அக்கட்சியின் செயற்குழு கூட்டம் வருகின்ற மே மாதம் 2ஆம் தேதி (02.05.2025 - வெள்ளிக்கிழமை) மாலை 04.30 மணிக்கு அவைத் தலைவர் அ. தமிழ் மகன் உசேன் தலைமையில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.