'மனிதநேய திருநாள்' என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், ''நான் அடிக்கடி சொல்வேன் இந்தியாவிலேயே நம்பர் ஒன் சிஎம் நம்முடைய முதல்வர் என்றால், நமது அமைச்சரவையில் நம்பர் ஒன் அமைச்சர் சேகர்பாபுதான். பெருமைக்காக சொல்லவில்லை உண்மையாக எனது மனதிலிருந்து சொல்லுகிறேன். அதற்கு மிக மிக முக்கியமான காரணம் திமுக ஆட்சி அமைப்பதற்கு முன்பு நம்முடைய எதிரிகள் அதிமுக, பாஜக ஆகிய இரண்டு சக்திகளும் திமுக ஆட்சி அமைத்தால் இந்து விரோத ஆட்சியாக இருக்கும் எனக் குறைசொன்னார்கள். ஆனால் ஆட்சி அமைந்த பிறகு அறநிலையத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு ஒவ்வொருநாளும் திமுக இந்துக்களுக்கான ஆட்சி என்று நிரூபித்து, அறநிலையத்துறையை அருமையான துறையாக மாற்றி மிகச் சிறப்பாகச் செயலாற்றி வருகிறார். அவர் எப்பொழுது உறங்குவார் என்றே தெரியவில்லை. நான் அடிக்கடி அவரிடம் கேட்பேன் உண்மையை சொல்லுங்க உங்களை மாதிரியே உருவம் கொண்ட தம்பியோ அண்ணனோ இருக்கிறார்களா. நீங்க இரண்டு பேரும் சேர்ந்து வேலை பாக்குறீங்களா என்று, அந்த அளவிற்கு அவருடைய உழைப்பு இருக்கும்.
மகளிருக்கான இலவச பஸ் வசதியை ஓசி பஸ் ஓசி பஸ் என்று சிலர் கூறுகின்றனர். உள்ளாட்சித் தேர்தலுக்காக பத்து நாட்கள் பிரச்சாரம் மேற்கொள்ளச் சென்றேன். நான் எப்பொழுது பிரச்சாரத்திற்கு சென்றாலும் பிரச்சாரத்தை முடித்துவிட்டு என்னுடைய அறைக்கு நான் வந்த பிறகு திமுக தலைவர் எனக்கு தொலைபேசியில் அழைத்து விசாரிப்பார். இன்றைக்கு நீ எந்த மாவட்டத்தில் இருக்கிறாய்.. எப்படி இருந்துச்சு... வரவேற்பு எப்படி இருந்தது... மக்கள் எழுச்சி எப்படி இருக்கு.. பொதுமக்கள் எப்படி உன்னை வரவேற்கிறார்கள்... வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது... என்பது குறித்ததெல்லாம் கேட்பார். நான் அவரிடம் சொன்னேன் கண்டிப்பாக சட்டமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றியைவிட அதிக வெற்றி பெறுவோம். ஏனெனில் மக்களை நேரடியாகப் போய் சந்தித்தேன். மக்களிடம் தலைவர் உங்களுக்காக இலவச பஸ் விட்டிருக்கிறார் என்று சொன்னேன், சிலர் எல்லாம் இதனை ஓசி பஸ்... ஓசி பஸ்... என்று சொல்லிக் கொண்டிருக்கும் நேரத்தில் மக்கள் அதனை ஸ்டாலின் பஸ் என்றே கூப்பிடுகிறார்கள். அந்த அளவிற்கு அந்தத் திட்டம் மக்களைச் சென்றடைகிறது. ஒட்டுமொத்த இந்தியாவே பாராட்டிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் ஆர்எஸ்எஸ் கூட்டம் நடந்தது. அதில் பாஜக தலைவர் 'ஸ்டாலின் இஸ் மோர் டேஞ்சரஸ் தன் கலைஞர்' என்று சொல்லியிருக்கிறார். நம்முடைய தலைவருக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டு இதுதான் என்று கருதுகிறேன்'' என்றார்.