கடந்த 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததால் அப்போதைய கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது பதவியில் இருந்து விலகினார். இதன் பின் சோனியா காந்தி இடைக்காலத் தலைவராகப் பொறுப்பேற்றார். முழு நேரத் தலைவரை தேர்ந்தெடுக்க முதலில் செப்டம்பர் மாதம் தேர்வு செய்யப்பட்டது. இதன் பின் அக்டோபர் 17ல் கட்சித் தேர்தல் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டது.
இதனை அடுத்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் செப்டம்பர் 24- ஆம் தேதி முதல் செப்டம்பர் 30- ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற வரும் அக்டோபர் 8- ஆம் தேதி கடைசி நாள் என்றும் அன்றைய தினமே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூர் என இரண்டு பேர் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர்.
அக்டோபர் 17- ஆம் தேதியான இன்று காலை 10.00 மணி முதல் காங்கிரஸ் கட்சியின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 04.00 மணி வரை இந்த தேர்தல் நடைபெறும். அக்டோபர் 19- ஆம் தேதி அன்று காலை 10.00 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கு வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் மொத்தம் 211 பேர் என்றும் அவர்களின் பெயர்களுடனான பட்டியல் தயாரிக்கப்பட்டு வாக்குச்சாவடிக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. சத்தியமூர்த்தி பவனில் மொத்தம் நான்கு வாக்குச்சாவடிப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. வாக்களிக்க வருபவர்கள் தங்களது அடையாள அட்டையை காண்பித்த பிறகே வாக்களிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். தேர்தல் முடிவடைந்து மாலை 4 மணிக்குப் பின் வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு நேரடியாக டெல்லிக்கு அனுப்பப்பட இருக்கிறது. சசி தரூர், மல்லிகார்ஜுன கார்கே இருவருக்கும் இடையே நேரடிப்போட்டி நிலவுவதால் காங்கிரஸ் தலைவருக்கான தேர்தல் களத்தில் பரபரப்பு நிலவுகிறது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு இருப்பதால் அவர் காங்கிரஸ் தலைவருக்கான தேர்தலில் கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் இருந்தே வாக்களிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.