தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூன் 11 மற்றும் 12 என இரண்டு நாள் பயணமாக சேலம் சென்றுள்ளார். அங்கு கலைஞரின் சிலையை திறந்து வைத்து ரூ. 2 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டப்பணிகளைத் துவக்கி வைக்கிறார். மேலும் 50 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.
இந்நிலையில் தற்போது சேலத்தில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “பூத் கமிட்டி அளவில் இவ்வளவு வலுவான கட்டமைப்பு கொண்ட கட்சி திமுக. இந்தியாவில் என்ன உலகத்திலேயே இது போன்று வேறு கட்சிகள் இருக்க முடியாது. மிக முக்கியமான காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். ஒரு பக்கம் கட்சியின் வளர்ச்சி. மற்றொரு பக்கம் ஆட்சியில் இருப்பதால் மாநிலத்தின் வளர்ச்சி. நமக்காக நாடாளுமன்றத் தேர்தல் களம் காத்திருக்கிறது. அடுத்தாண்டு தானே தேர்தல் என்று மெத்தனமாக இருந்துவிடக் கூடாது.
பாஜகவின் செல்வாக்கு நாடு முழுதும் நாளுக்கு நாள் சரிந்து கொண்டுள்ளது. அந்த ஆத்திரத்தில் எந்த முடிவையும் எப்போதும் எடுப்பார்கள். கர்நாடகத் தேர்தல் தோல்வியைப் போல் தொடர்ந்து கிடைத்ததேயானால் முன்கூட்டியே நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முன் வரலாம். எனவே நாடாளுமன்றத் தேர்தலுக்கு நாம் இப்போதே தயாராக இருக்க வேண்டும். மத்திய அமைச்சர் அமித்ஷா சென்னை வருகிறார். நாடாளுமன்றத் தேர்தலுக்கு அவர்கள் தயாராவதை இது காட்டுகிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் அமித்ஷா கடந்த 9 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு செய்து கொடுத்த திட்டங்களை பட்டியலிட வேண்டும் என்று கேட்கிறேன்” என்றார்.