அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வந்த நிலையில், தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கடந்த 05.03.2021 அன்று கையெழுத்தாகி, பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதேபோல் இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த 6 ஆம் தேதி ஒதுக்கப்பட்ட கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் முன்னாள் பாஜக இணையமைச்சரும், தமிழக பாஜக மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என்ற அறிவிப்பு வெளியான நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (07.03.2021) கன்னியாகுமரி வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடும் தொகுதியில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இந்நிலையில், தற்போது சென்னை திருமங்கலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், திருச்சி திமுக பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் வாசித்த 7 வாக்குறுதிகள் குறித்த கேள்விக்கு, ''எல்லாருக்கும் இரண்டு இரண்டு ஏக்கர் நிலம் தருவேன் என்று சொன்னார்களே, உங்களுக்கு ஞாபகம் இருக்கும். நான்கு முறை தமிழகத்திற்கு முதல்வராக இருந்த கலைஞர் ஐந்தாவது முறையாக வெற்றிபெறுவதற்காக 2 ஏக்கர் நிலம் தருவேன் என்று சொன்னார். அதில் மக்கள் மயக்கப்பட்டு ஓட்டு போட்டார்கள். ஜெயித்து வந்தார்கள். நான்கு முறை முதல்வராக வெற்றிபெற்ற கலைஞர் 'கொடுக்கும் அளவிற்கு இவ்வளவு நிலம் தமிழகத்தில் இல்லை என்பது இப்பொழுதான் தெரிகிறது' என்று சொன்னார். இதைவிட கேவலமான பொய் ஏதாவது இருக்க முடியுமா? எனவே இது ஏழு வாக்குறுதிகள் அல்ல ஏமாற்று வாக்குறுதிகள் '' என்றார்.