“தமிழகத்தில் இருப்பது பழைய அதிமுக அல்ல; ஆர்எஸ்எஸ், பாஜக முகமூடி அணிந்த அதிமுகதான் இப்போது தமிழகத்தில் இருக்கிறது என்று காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் ராகுல்காந்தி பேசினார். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் சேலம் சீலநாயக்கன்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 28) பரப்புரை பொதுக்கூட்டம் நடந்தது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி எம்பி சிறப்புரை ஆற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது, “தமிழகத்தில் நாம் பல தேர்தல்களை சந்தித்திருக்கிறோம். ஆனால், இப்போது நடக்கின்ற தேர்தல் என்பது இரண்டு கட்சிகளுக்கு இடையேயான போர் அல்ல. தமிழர் கலாச்சாரம், தமிழ் மொழி, தமிழர்களின் வரலாறு மீது முழுமையான தாக்குதலை சந்தித்துக்கொண்டு இருக்கிறோம். நாம் தமிழ்நாடு, இந்தியா என்று சொல்வோம் என்றால், இந்தியாவும் தமிழ்நாடு என்று சொல்லித்தான் ஆக வேண்டும். அதன் பொருள் என்னவென்றால், எந்த உறவும் சமநிலையில் இருக்க வேண்டும். அன்பும், மரியாதையும் ஒருவருக்கு ஒருவர் செலுத்தும் வகையில் இருக்க வேண்டும். இந்தியா என்பது பல மாநிலங்களின் ஒருங்கிணைப்பு. பல்வேறு பண்பாடு, பல்வேறு மதங்கள், பல்வேறு மொழிகள், பல்வேறு கலாச்சாரங்களின் ஒருங்கிணைப்பு ஆகும். எந்த ஒரு சிந்தனையும் ஒன்றைவிட ஒன்று உயர்ந்தது என்று சொல்லிவிட முடியாது. எந்த மொழியும் மற்றொரு மொழியைவிட உயர்ந்தது என்று சொல்ல முடியாது. எந்த பண்பாடும், எந்த கலாச்சாரமும் ஒன்றைவிட ஒன்று உயர்ந்ததாக அமையாது.
இந்த நாட்டுக்கு நாம் அனைவரும் ஒரேவிதமான முக்கியத்துவம் வாய்ந்தவர்கள்தான். இன்றைக்கு தமிழ் பண்பாடு, தமிழ் மொழி மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்த தாக்குதல், ஒன்றுபட்ட இந்திய சிந்தனையின் மீதான தாக்குதலாக பார்க்கிறேன். தமிழர்களை மதிக்காத நாடாக இந்தியா இருக்க முடியாது. அதேபோல், மேற்கு வங்கத்தை மதிக்காத இந்தியா இருக்க முடியாது. இந்தியாவை ஒற்றைச் சிந்தனைக்குத் தள்ளிவிடும் முயற்சி நம் நாட்டுக்கு உரித்தானது அல்ல. எல்லா சித்தாந்தங்களும் சேர்ந்துதான் இந்தியாவை உருவாக்கி இருக்கிறது. அனைத்து மொழிகளும், அனைத்து மதங்களும், அனைத்து மாநிலங்களும், அனைத்து பண்பாடுகளும் சேர்ந்துதான் இந்தியாவை உருவாக்கி இருக்கின்றன. ஒற்றைச் சிந்தனைதான் இந்தியாவின் சிந்தனை என்பதை என்னால் ஒப்புக்கொள்ள முடியாது. அதனால்தான் நான் இன்று உங்கள் முன்னால் நிற்கிறேன். நான், தமிழ் மொழிக்காக மட்டும் இந்த மேடையில் நிற்கவில்லை. ஒருபுறம் நான் தமிழ் சிந்தனையை ஆதரிக்கும்போது, மற்றொருபுறம் அனைத்து சிந்தனைகளையும், பண்பாடுகளையும் மதிக்கிறேன். இங்கே, கி.வீரமணி பேசும்போது, முகக்கவசம் பற்றி கூறினார். கரோனா நேரத்தில் முகக்கவசம் அணிவது முக்கியம் என்று சொன்னார்.
இன்று நாம் முகக்கவசம் அணிந்திருப்பவர்களை எங்கும் பார்க்கிறோம். முகக்கவசத்திற்குப் பின்னால் என்ன மாதிரியான சிந்தனை ஓடுகிறது என்பதை நம்மால் கண்டறிய முடியாது. நாம் ஒருவரைப் பார்த்து சிரிக்கிறோம் என்றாலும் மற்றவர்களுக்குத் தெரியாது. இதை வைத்தே நீங்கள் அதிமுகவைப் பற்றி உணர்ந்துகொள்ள முடியும். இப்போது இருக்கும் அதிமுக, பழைய அதிமுக அல்ல. இப்போதுள்ள அதிமுக, முகக்கவசம் அணிந்துள்ள கட்சியாக இருக்கிறது. இது அதிமுவை போல தோற்றம் அளிக்கக் கூடியது. இந்த அதிமுக என்பது ஆஸ்எஸ்எஸ், பாஜகவின் முகமூடி அணிந்துள்ள கட்சி என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியும். பழைய அதிமுக முடிந்துவிட்டது. இது ஆர்எஸ்எஸ், பாஜகவால் இயக்கப்படும் அமைப்பாக இருக்கிறது. இதை தமிழ்நாட்டு மக்கள் புரிந்துகொள்ள வேணடும். இந்த முகமூடிக்குப் பின்னால் என்ன இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு தமிழர் கூட நரேந்திர மோடிக்கு முன்னால் தலை குனிந்து நிற்பதை விரும்பவில்லை. ஒரு தமிழர் கூட அமித்ஷா, மோகன் பகவத் ஆகியோரை சந்தித்துப் பேச விரும்பவில்லை.
அப்படிப்பட்ட நிலையில், தமிழக முதல்வர் ஏன் மோடி, அமித்ஷா ஆகியோர் முன்பு தலை குனிந்து நிற்க வேண்டும்? ஏன் அவர்களின் காலடியில் விழ வேண்டும்? எந்த ஒரு தமிழரும் முதல்வரின் செயலைக் கண்டு மகிழ்ச்சி அடைய மாட்டார்கள். இது நம் பண்பாட்டுக்கும், நடைமுறைக்கும் எதிரான ஒன்று. இதற்கு முன்பு இருந்த தமிழக முதல்வர், மோடியின் முன்னால் தலை குனிந்து நிற்க விரும்பமாட்டார்கள். இப்போதுள்ள முதல்வர் ஏன் தலை குனிந்து நிற்கிறார் என்றால், பாஜக கட்டுப்பாட்டில் சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவற்றை வைத்திருக்கிறார்கள். இப்போதுள்ள முதல்வர் தவறு செய்திருக்கிறார் என்பதால் தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காக மோடியின் முன்பு தலை குனிந்து நிற்கிறார். இதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை. அவர் மோடியின் முன்னால் தலை குனிந்து நிற்பதற்கான விலையை அவர் கொடுத்தாக வேண்டும். நரேந்திர மோடியின் முன்பும், அமித்ஷா முன்பும் இப்போதுள்ள முதல்வர் தலை குனிந்து நிற்கும்போது அதற்கான விலையை அவர் கொடுக்கவில்லை, உண்மையில் நீங்கள்தான் அதற்கு மிகப்பெரிய விலையைக் கொடுத்துக்கொண்டிருக்கிறீர்கள். முதலில் கலாச்சாரம், வரலாறு, மொழி ஆகியவற்றை விலையாகக் கொடுக்கிறீர்கள். உங்கள் முதல்வர் அதை சொல்வதில்லை. எந்த ஒரு மனிதன் தமிழ் பண்பாட்டையும், தமிழ் மொழியையும், வரலாற்றையும் காப்பாற்ற இருக்கிறாரோ அவர் அவற்றைப் பற்றி கவலைப்படவில்லை.
உங்களுடைய மிகப்பெரிய வலிமை என்பது சிறு, குறு தொழில்கள்தான். இந்த நாட்டின் உற்பத்தி தலைநகராக தமிழ்நாடு இருக்கிறது. இங்குள்ள பல்வேறு சிறு, குறு தொழிற்சாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் நாடு முழுவதும் விநியோகம் செய்யப்படுகிறது. மரணப்படுக்கையில் கிடக்கும் நோயாளிகளை ஆம்புலன்ஸ்கள் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்கிறார்கள். அத்தகைய ஆம்புலன்ஸ் வாகனங்களைத் தயாரிப்பது இந்த தமிழ்நாடுதான். பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி ஆகியவை சிறு, குறு தொழில் உற்பத்தியாளர்கள் மீது இரண்டுபுறமும் தாக்குதலை நடத்தியிருக்கிறது. இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பையும், வாழ்வாதாரத்தையும் இழந்துள்ளனர். தமிழ்நாட்டுக்கு ஏன் இப்படியொரு பாதிப்பை, காயத்தை ஏற்படுத்தி இருக்கிறீர்கள் என்று இப்போதுள்ள முதல்வர், பிரதமரை பார்த்து ஒரு கேள்வி கூட கேட்கமாட்டார். மூன்று விவசாய சட்டங்களால் விவசாயிகள் வஞ்சிக்கப்படுகிறார்கள். அந்த சட்டங்கள் தேவையில்லை என்று சொல்லும் துணிச்சல் இந்த முதல்வருக்கு இல்லை. தமிழர்களின் கல்வி முறையையும், வாழ்வியல் முறையையும் அழிக்கும் வகையில் கல்விக் கொள்கை திட்டமிட்டு இங்கே திணிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வால் தமிழர்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளனர். இதற்கெல்லாம் முதல்வர் குரல் எழுப்பவில்லை.
நரேந்திர மோடியும், அமித்ஷாவும் எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்ற அனுமதியை இந்த முதலமைச்சர் கொடுத்திருக்கிறார். அவர்கள் இந்த நாட்டைப் பிளவுபடுத்துகிறார்கள், தாக்குகிறார்கள். இவற்றை எதிர்த்துக் கேள்வி கேட்கும் துணிவும் இந்த முதல்வரிடம் இல்லை. நான் தமிழ் மொழியைப் புரிந்துகொண்டதாக என்னை காட்டிக்கொள்ள விரும்பவில்லை. உங்கள் வரலாறும், பண்பாடும் உங்களுக்கு நிகராக வேறு எவரும் இருக்க முடியாது என்பதை எனக்கு உணர்த்துகிறது. ஆனால் உங்களின் எண்ண ஓட்டத்தைப் புரிந்துகொள்வேன். உங்கள் பண்பாடு, உங்கள் மொழி, வரலாறு மீது தொடுக்கப்படும் போரை அனுமதிக்க மாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும். இங்கே ஒரு தேர்தலே தேவையில்லை. ஸ்டாலின்தான் முதல்வராக பொறுப்பேற்க போகிறார் என்பதை தேர்தலை சந்திக்காமலே என்னால் சொல்ல முடியும். இதுதான் இன்றைய நிலை. அந்த முடிவை ஒப்புக்கொள்ளும் விதமாகத்தான் வரப்போகிற தேர்தல் அமையப் போகிறது. ஆனால் இந்தப் போர் இத்துடன் முடிந்துவிடப்போவதில்லை. ஆஸ்எஸ்எஸ் மற்றும் பாஜகவை தமிழகத்திற்குள் நுழைய விடாமல் தடுத்துவிட்டதாலேயே அவர்கள் நம்மை தாக்க மாட்டார்கள் என்று எண்ணிவிடக் கூடாது. அவர்களிடம் ஏகப்பட்ட பணம் இருக்கிறது. ஏகப்பட்ட சக்தி இருக்கிறது. ஆட்கள் இருக்கிறார்கள். மீண்டும் மீண்டும் தமிழகத்திற்குள் நுழைய முயற்சி செய்வார்கள்.
முதலில் அவர்களைத் தடுப்பதற்கான ஒரே வழி, தமிழ்நாட்டில் நுழைவதை தடுத்தாக வேண்டும். பிறகு டெல்லியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாநிலமும் இந்தப் பாதிப்பில் அகப்பட்டுக் கொண்டு தவிக்கிறது. ஜனநாயகம் அழிக்கப்பட்டு வருகிறது. அதற்கெல்லாம் காரணம் என்னவென்றால், தங்களுடைய ஒரு சில நண்பர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பது மட்டுமே அவர்களுடைய எண்ணமாக இருக்கிறது. சிலருக்கு பணம் கிடைக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் திட்டமாக இருக்கிறது. நமது பண்பாட்டை, நம் மொழியை, நம் கலாச்சாரத்தை எல்லாம் விலை கூறும் நிலை இருக்கிறது. என் அனுபவத்தில், தமிழர்களுடன் எனக்குள்ள உறவு என்பது மிக எளிமையான அனுபவம் ஆகும். நான் பார்த்து அறிந்துகொண்டது. என் பாட்டி, என் தந்தை மூலமாக நான் உணர்ந்திருக்கிறேன். தமிழர்களுக்கு நாங்கள் சிறிய அளவு அன்பும், பாசமும் காட்டினால் போதும். அவர்கள் அதிக அக்கறையும் பாசமும் காட்டுவார்கள். தமிழர்களின் உள்ளத்தில் இடம்பெறுவதற்கு பாசமும், அன்பும் மட்டுமே கருவியாக உள்ளது. இதை பாஜக, ஆர்எஸ்எஸ் உணரவில்லை. அவர்களின் கோபமும், ஆத்திரமும் தமிழர்களுடனான அணுகுமுறையைத் தடுக்கிறது. இந்தத் தேர்தலில் நாம் அவர்களுக்குப் புரிய வைப்போம்” இவ்வாறு ராகுல்காந்தி பேசினார். முன்னதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர்.