தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் தலைவர்கள் தீவிரமாக வாக்குச் சேகரித்து வரும் நிலையில், கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளருமான நடிகர் கமல்ஹாசன், கோவை தெற்கு தொகுதி மக்களுக்குத் தன்னுடைய உறுதிமொழிப் பட்டியலை வெளியிட்டார்.
அந்த உறுதிமொழிப் பட்டியலில், 'நீண்ட நாட்களாக பட்டா இன்றி வசிக்கும் மக்களுக்கு இலவசப் பட்டா வழங்கப்படும். ஊருக்கு வெளியே மத்திய சிறை மாற்றப்பட்டு, அந்த இடத்தில் மார்க்கெட் பிளாசா அமைக்கப்படும். தங்க நகை உற்பத்தியாளர்களுக்கு நலவாரியம் அமைக்கப்படும். தொகுதி முழுக்க 6 அடி ஆழத்தில் பாதாள சாக்கடை வசதி செய்து தரப்படும். தொகுதியில் அரசு ரத்த வங்கி அமைக்கப்படும். ஆதரவற்ற முதியோர்களுக்கான இல்லம் அமைத்துத் தந்து அவர்களுக்கு உணவு வழங்கப்படும். மருத்துவக் காப்பீடும் செய்து தரப்படும். அனைத்து வார்டுகளிலும் உடற்பயிற்சிக் கூடம் மற்றும் நூலகங்கள் அமைக்கப்படும். கந்துவட்டி முழுமையாக ஒழிக்கப்படும். சிறு குறு தொழில்முனைவர்களுக்கு நியாயமான வட்டியில் கடன் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். அனைத்து வார்டுகளிலும் இலவச சட்ட சேவை மையங்கள் அமைக்கப்படும். அனைத்து வார்டுகளிலும் திறன் மேம்பாட்டு முகாம்கள் அமைக்கப்படும். கிராஸ்கட் ரோடு உள்ளிட்ட வர்த்தகச் சாலைகளில் சோலார் சாலைகள் அமைக்கப்படும்.
பிளாஸ்டிக் பயன்பாடு ஒழிக்கப்படும். நீர், நெகிழி மற்றும் மின் கழிவுகளை மறுசுழற்சி முறையில் பயன்படுத்த குடிசைத் தொழில்கள் மற்றும் சுய உதவிக்குழுக்கள் ஊக்குவிக்கப்படும். அரசின் சேவைகள் வீடுதேடி வரும். அனைத்து வார்டுகளிலும் தெரு விளக்குகள் சரியாகச் செயல்படுவது உறுதி செய்யப்படும். தொகுதி முழுக்க சுத்தமான குடிநீர் சீரான விநியோகத்தில் கிடைப்பது உறுதி செய்யப்படும். சுத்தமான சுகாதாரமான கோவையாகத் திகழ அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். திடக்கழிவு மேலாண்மை உறுதி செய்யப்படும். ஒவ்வொரு அரசுப் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் பள்ளிக்கல்வி முடித்த மாணவ, மாணவியரை உட்படுத்தி மாணவர் நண்பர்கள் அமைப்பு உருவாக்கப்படும். அம்பேத்கர் விடுதி மற்றும் அரசுப் பள்ளிகளில் சுகாதாரமான குடிநீர் மற்றும் கழிவறை வசதி, கழிவுநீர் மேலாண்மை வசதி செய்து தரப்படும். ஆதரவற்ற இல்லங்களில் பயிலும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி அளிக்கும் இலவச மையங்கள் அமைக்கப்படும். அமைப்புசாரா தொழிலாளர்களின் நலன்கள் பேணப்படும். பொதுமக்களின் பங்களிப்போடு நீர் நிலைகள் முறையாகப் பராமரிக்கப்படும். போக்குவரத்து நெரிசல் குறைய நடவடிக்கை எடுக்கப்படும். பாலம் கட்டும் பணிகளை விரைந்து முடிக்க ஏற்பாடு செய்யப்படும். அரசாங்கம், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பொது இடங்களில் பெண்களுக்கான சிறப்பு உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும்' உள்ளிட்ட உறுதிமொழிகளை தனது தொகுதி மக்களுக்கு கமல்ஹாசன் அளித்துள்ளார்.