சென்னை அசோக் நகர் அம்பேத்கர் திடலில் அமைந்துள்ள விசிக தலைமை அலுவலகத்தில், அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்று நூல் (ICONOCL AST) வெளியீடு மற்றும் உரையாடல் நிகழ்வு இன்று (07.12.2024) நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் தொல். திருமாவளவன் எம்.பி. பேசுகையில், “திருமாவளவன் தடுமாறுகிறார் திருமாவளவன் பின் வாங்குகிறார் என்று சொல்கிறார்கள். எனவே ஏதோ ஒன்று நடக்கிறது எனக் குழம்பி விடக்கூடாது என்பதற்காக இதனைச் சொல்கிறேன்.
திருமாவளவன் தடுமாறுகிறார் என்று சொல்பவர்களுக்கு நான் பதில் சொல்லவில்லை. அதனால் கட்சி தொண்டர்களுக்கு எந்த தடுமாற்றமும் ஏற்பட்டு விடக்கூடாது என்று சொல்கிறேன். அந்த நம்பிக்கையை எப்போதும் விசிகவினர் கொண்டிருக்க வேண்டும். நம்மை சமூக ரீதியாகக் குறைத்து மதிப்பிடலாம். பொருளாதார ரீதியாகக் குறைத்து மதிப்பிடலாம். இன்னும் சொல்லப்போனால் நம்மை அரசியல் ரீதியாகவும் கூட குறைத்து மதிப்பிடலாம். ஆனால் ஒருபோதும் நாம் சுயமரியாதை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது.
நம் தன்மானத்தை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. கருத்தியல் நிலைப்பாட்டில் கொண்டிருக்கிற உறுதிப்பாட்டை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. அதை மதிப்பீடு செய்யக்கூடிய அளவிற்குத் தகுதி பெற்றவர்கள் தமிழகத்தில் இல்லை. நாங்கள் எவ்வாறு கருத்தியல் களத்தில் தெளிவோடு இருக்கிறோம், துணியோடு இருக்கிறோம், உறுதியோடு இருக்கிறோம் என்பதை ஒவ்வொரு முறையும் உறுதிப்படுத்த வேண்டிய தேவை இல்லை” எனப் பேசினார்.
- படங்கள் : எஸ்.பி. சுந்தர்