கலைஞரின் நூற்றாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி நேற்று கலைவாணர் அரங்கில் 'கலைஞர் நினைவு நாணயம் வெளியீட்டு விழா' நடைபெற்றது. இதில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டிருந்தார். திமுக முன்னாள் தலைவரின் நாணய வெளியீட்டு நிகழ்ச்சியில் பாஜக பங்கேற்றதை சுட்டிக்காட்டிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக பாஜகவுடன் இணக்கமாக சென்றுவிட்டதாக விமர்சித்து பேசியிருந்தார்.
இந்நிலையில் திருவெற்றியூரில் நடைபெற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கரின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ''மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டதை சிலரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தமிழகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்று ஒருவர் இருக்கிறார். அவர் நேற்று பேட்டி கொடுக்கிறார் 'நாணயம் வெளியிடுகிறார்கள் அதில் இந்தியில் இருக்கிறது. தமிழில் இல்லை. தமிழ்... தமிழ்... என்று முழங்குகிறார்களே ஆனால் இந்தியில் இருக்கிறது' என்று சொல்கிறார்.
முதலில் உங்களுக்கு அரசியல் தெரிந்திருக்க வேண்டும். அல்லது நாட்டினுடைய நடப்பு புரிந்திருக்க வேண்டும். மண்டையில் மூளையாவது இருக்கணும். அந்த நிகழ்ச்சி எப்படி நடக்கின்றது என்றால் மத்திய அரசு அனுமதி கொடுத்து மத்திய அரசின் மூலமாக நடைபெறக்கூடிய நிகழ்ச்சி. ஏற்கனவே பல பேருக்கு நாணயங்கள் வெளியிடப்பட்டு இருக்கிறது. மறைந்த எம்ஜிஆருக்கு நாணயம் வெளியிடப்பட்டிருக்கிறது. அதேபோல் அறிஞர் அண்ணாவுக்கு நாணயம் வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த நாணயத்தை எல்லாம் ஒருவேளை எடப்பாடி பழனிசாமி பார்த்திருக்க மாட்டார் என்று நினைக்கிறேன். அதை எடுத்து பாருங்கள். எல்லா தலைவர்களுக்கும் நாணயம் வெளியிடுகின்ற பொழுது ஒன்றிய அரசு சார்பில் இந்தி, ஆங்கில எழுத்துக்கள் அமைந்திருக்கும்.
ஆனால் அண்ணா அவர்களுக்கு நாணயத்தை வெளியிடுகின்ற பொழுது கலைஞர் யாரும் செய்யாத ஒரு அதிசயத்தை செய்தார். அண்ணாவுடைய தமிழ் கையெழுத்து அதில் இடம்பெற வேண்டும் என்று சொல்லி அவருடைய தமிழ் கையெழுத்து அதில் பொறிக்கப்பட்டு அதற்குப் பிறகு நாணயம் வெளியிடப்பட்டது. அது மாதிரி தான் கலைஞருடைய நாணயத்தை வெளியிடுகின்ற பொழுது கலைஞருக்கு ரொம்ப பிடித்தது 'தமிழ் வெல்லும்'. பெரும்பாலும் அவர் கையெழுத்து போடும் பொழுது 'தமிழ் வெல்லும்' என எழுதி கையெழுத்து போடுவார். இல்லையென்றால் 'அண்ணா வாழ்க', 'அண்ணா புகழ் ஓங்குக', 'பெரியார் வாழ்க' அப்படிதான் போடுவார். எனவே நாணயத்தில் 'தமிழ் வெல்லும்' என்ற வார்த்தை தமிழில் தான் எழுதப்பட்டு இருக்கிறது. இதைக் கூட அவர் பார்க்காமல்; இதைக் கூட புரிந்து கொள்ளாமல்; தெரிந்து கொள்ளாமல் இப்படி ஒரு எதிர்க்கட்சித் தலைவர் நமக்கு வந்து வாய்த்திருக்கிறார் என்று தான் நமக்கு வருத்தமாக இருக்கிறது.
எடப்பாடி கேட்கிறார் 'ஏன் ராகுல் காந்தியை அழைக்கவில்லை' என்று, ஐயா எதிர்க்கட்சித் தலைவர் அவர்களே... எடப்பாடி பழனிசாமி அவர்களே... இந்த நிகழ்ச்சியை திமுக நடத்தவில்லை. இந்த நிகழ்ச்சியை நடத்தியது ஒன்று அரசு. ஒன்றிய அரசினுடைய நிகழ்ச்சி அதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அந்த அடிப்படையில் தான் அந்த நிகழ்ச்சி நடந்தது. இந்த சராசரி அறிவு கூட இல்லாமல் ஒரு எதிர்க்கட்சித் தலைவரா என்பதுதான் நமக்கெல்லாம் வேதனையாக இருக்கிறது.
இதில் பழனிசாமிக்கு என்ன வலிக்கிறது. எம்ஜிஆருக்கும் நாணயம் வெளியிட்டார்கள். ஒன்றியத்திலிருந்து யாரும் வரவில்லை. எடப்பாடி பழனிசாமியே வெளியிட்டார். ஏனென்றால் ஒன்றிய அரசு அவரை மதிக்கவில்லை. எடப்பாடி பழனிசாமியை ஒரு முதலமைச்சராக மட்டுமல்ல அவரை மனிதனாகவே மத்திய அரசு நினைக்கவில்லை. எனவே வர மறுத்து விட்டார்கள். இதுதான் அவருக்கு இருந்த மரியாதை. இன்று நாம் அழைத்தவுடன் அடுத்த வினாடியே ஒரு சொல் கூட தட்டாமல் ஒரு 15 நிமிடம் முதல் அரை மணி நேரத்திற்குள் நிகழ்ச்சியை நடத்திக் கொடுத்து விட்டுச் செல்ல வேண்டும் என சொன்னதற்கு, 15 நிமிடம் என்ன, எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் இருந்து நான் காத்திருந்து நிகழ்ச்சி நடத்தி தருகிறேன் என்று சொல்லிவிட்டு வந்தார் ராஜ்நாத் சிங். அதுதான் திமுகவிற்கு இருக்கக்கூடிய பெருமை, கலைஞருக்கு இருக்கக்கூடிய சிறப்பு'' என்றார்.