தமிழக சட்டமன்றத் தேர்தலில் வருகின்ற 6ஆம் தேதி நடைபெறுகிறது. இதனுடன் சேர்ந்து கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைதேர்தலும் நடக்கிறது. இதில், அதிமுக - பாஜக கூட்டணியில் பாரதிய ஜனதாவுக்கு 20 தொகுதிகளை அதிமுக ஒதுக்கியுள்ளது. அதேபோல் இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கியது அதிமுக. அதனைத் தொடர்ந்து ஒதுக்கப்பட்ட கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் முன்னாள் பாஜக இணையமைச்சரும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டவருமான பொன்.ராதாகிருஷ்ணனை இம்முறையும் அத்தொகுதியின் வேட்பாளராக அறிவித்தது பாஜக.
இந்நிலையில் அவர் அங்கு பரப்புரை மேற்கொண்டுவருகிறார். நேற்று கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட நாகர்கோவிலில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், “அனைத்து விதமான வேறுபாடுகலையும் கடந்து, அரசியல் பாகுபாடுகளையும் கடந்து இந்தத் தேர்தலில் பாஜகவிற்கு வாக்களிப்பார்கள். பாஜகவிற்கு எதிரான வேட்பாளர் யாருமில்லை. ஆனால், மக்களுக்கு எதிரான வேட்பாளர் இருக்கிறார்கள்” என்றார்.