அதிமுகவில் இருந்த களைகள் நீக்கப்பட்டுவிட்டதாக எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ''விவசாயத் தொழிலாளிகளுக்கும், விவசாயப் பணியாளர்களுக்கும் ஆதரவாக இருந்த அரசு அதிமுக அரசு. ஒரு நெற்பயிர் சிறப்பாக வளர வேண்டும் என்பதற்காக நடவு செய்தவுடன் அந்த காலத்தில் களையெடுப்பார்கள். அதுபோல் அதிமுகவில் களைகள் நீக்கப்பட்டுள்ளன. இதனால் அதிமுக என்ற பயிர் செழித்து வளர்ந்து வருகிறது. சிலபேர் அரசியலில் சொந்த ஆசைக்காக இருக்கிறார்கள். ஆனால், அதிமுகவில் ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆகியோரின் ஆட்சி தொடர வேண்டும் என்ற சேவை மனப்பான்மையில் இருக்கிறார்கள்.
இப்பொழுது கூட நான் தொண்டன் என்று தான் சொல்லிக் கொள்கிறேன். தலைவன் என்று சொல்கின்ற வார்த்தையே என்னிடம் கிடையாது. தொண்டனோடு தொண்டனாக இருந்து தான் உங்களுடைய ஆதரவால் இன்று இந்த நிலைக்கு வந்திருக்கிறோம். அதிமுகவை பொறுத்தவரை என்னை போல் ஒரு லட்சம் பழனிசாமிகள் அதிமுகவில் உள்ளனர். எவராலும் தொட்டுப் பார்க்க முடியாது. இது தொண்டனால் நடத்தப்படுகின்ற கட்சி. தொண்டனுக்கு தான் முக்கியத்துவம். தொண்டன் தான் இந்த கட்சியை வளர்க்கின்றான். தொண்டன் தான் உழைக்கின்றான். தொண்டர்களின் உழைப்பால் தான் மீண்டும் அதிமுக அரசு அமையும்'' என்றார்.