நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான தேர்தல் பணிக்குழு மற்றும் கூட்டணி தொகுதிப் பங்கீடு ஆகிய விஷயங்களைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் அந்தந்த தொகுதிகளைச் சேர்ந்த திமுக நிர்வாகிகளுடன் திமுக தலைமை ஆலோசனை செய்து வருகிறது. சென்னையில் அதற்கான திமுக ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. மதுரை எம்பி தொகுதி திமுகவிற்கே ஒதுக்கீடு செய்ய வேண்டும் என ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கோரிக்கை எழுந்துள்ளது. மதுரை எம்.பி செயல்பாடுகளில் அதிருப்தி தெரிவித்த மதுரை திமுக நிர்வாகிகள், தொகுதியை திமுகவிற்கே ஒதுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.
அதேபோல் தேனி தொகுதியை திமுகவிற்கு ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த முறை கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கியதால் தேனி தொகுதியில் தோல்வி ஏற்பட்டது. மக்களுக்கு அறிமுகமான நபரை நிறுத்த வேண்டும் என தேனி திமுக நிர்வாகிகள் கட்சித் தலைமையிடம் வலியுறுத்தியுள்ளனர். யாரை அறிவித்தாலும் தொகுதியில் வெற்றி பெற பணியாற்ற வேண்டும் என அவர்களுக்கு ஒருங்கிணைப்புக் குழு அறிவுரை வழங்கியுள்ளது.