திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ.-வும் முக்குலத்தோர் புலிப்படை தலைவருமான கருணாஸ் 'தேசிய தெய்வீக' யாத்திரை என்ற பெயரில் ஆறு நாள் சுற்றுப்பயணத்தை சென்னையில் இருந்து தொடங்கினார்.
சென்னையில் இருந்து புறப்பட்ட அவரது யாத்திரைப் பயணம் உளுந்தூர்பேட்டை கள்ளக்குறிச்சி வழியே பல மாவட்டங்களைக் கடந்து மதுரையில் முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கிடையே, அவரது பயணம் சென்னையிலிருந்து புறப்பட்டு திண்டிவனம் வந்து சேர்ந்தது. அப்போது போலீசார் அவரது வாகனத்தை மறித்தனர். அப்போது எம்எல்ஏ கருணாஸ், 'ஏன் எங்கள் காரை மறிக்கிறீர்கள்?' என்று கேட்டார். அதற்கு போலீசார் 'உங்களுக்கு யாத்திரை செல்ல அனுமதி இல்லை' என்று கூறியுள்ளனர். இதனால் போலீசாருக்கும் கருணாசுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, கருணாஸுடன் வந்த அவரது தொண்டர்கள் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். அங்கு விரைந்து வந்த திண்டிவனம் டிஎஸ்பி கணேசன், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கருணாஸ், 'எங்கள் வாகனம் யாத்திரையாகச் செல்வதற்கு முறையாக அனுமதி பெற்றே செல்கிறோம்' எனக் கூறினார். ஆனால், போலீசார் அவர் யாத்திரையாக வந்த வாகனத்தைப் பறிமுதல் செய்தனர். மேலும், யாத்திரையாகச் செல்லக்கூடாது என்று அறிவுறுத்தினார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் 'தேசிய தெய்வீக' யாத்திரை என்ற பெயரில் தாங்கள் யாத்திரை செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளனர்.
அப்போது, கருணாஸ் சென்னையில் தொடங்கிய இந்தப் பயணத்தின் நோக்கம் 'முக்குலத்தோர் சமுதாய இளைஞர்களைச் சந்திப்பது', 'முக்குலத்தோரின் முக்கியக் கோரிக்கையான 25 சதவீத இட ஒதுக்கீடை வழங்க வேண்டும்' என வலியுறுத்துவது உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றவேண்டி தொடங்கப்பட்டது. இதற்காக அனுமதி கேட்டு காவல்துறையிடம் மனு கொடுத்துள்ளேன். ஆனால், என்னுடன் வந்த வாகனத்தில் தேசிய தெய்வீக யாத்திரை என்று வாசகம் இடம் பெற்றுள்ளதால் அந்த வாசகம் இருக்கக் கூடாது எனக் காவல்துறையினர் தெரிவித்ததோடு எங்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். நாங்கள் மக்களுக்கு இடையூறு செய்யும் வகையிலோ அல்லது பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலோ நடந்து கொள்ளமாட்டோம்.
ஜெயலலிதாவிடம் என்னை அறிமுகம் செய்தவர் சசிகலா. இதனால் சசிகலா மீது எனக்கு எப்போதும் தனி மரியாதை உண்டு. அவர் உடல் நலம்பெற்று சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே வர வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அவர் சிகிச்சை முடிந்து வந்ததும் நேரில் சென்று சந்திப்பேன். தற்போதும் நாங்கள் அதிமுக கூட்டணியில் தான் உள்ளோம். முதலமைச்சரை நான் எதுவும் தவறாகப் பேசவில்லை. எனது ஆறு நாள் பயணம் முடிந்ததும் எங்களது கோரிக்கை அடங்கிய மனுவை முதலமைச்சரை சந்தித்துக் கொடுக்க உள்ளேன். அரசு இந்தச் சமுதாயம் சார்ந்த மக்களின் கோரிக்கைக்கு காது கொடுக்க வேண்டும்" இவ்வாறு கூறினார்.
முக்குலத்தோர் புலிப்படை தொண்டர்களை போலீசார் தடுத்து நிறுத்திய சம்பவம் திண்டிவனம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.