ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பரபரப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனும், அதிமுக சார்பில் தென்னரசுவும் போட்டியிடுகிறார்கள். அதே போன்று நாம் தமிழர், தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் தனித்தனியே வேட்பாளர்களைக் களமிறக்கி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன.
தென்னரசுவை ஆதரித்து அதிமுகவின் மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டனர். அதேபோல் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து காங்கிரஸ் தலைவர்கள், திமுக அமைச்சர்கள் பலரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், பிரச்சாரத்தின் இறுதிநாளான இன்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து ஈரோடு கிழக்கில் இறுதிக்கட்ட பிரச்சாரமாக திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான ஸ்டாலின் சம்பத் நகரில் திறந்த வேனில் வந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு இருந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அடுத்தகட்டமாக முனிசிபல் காலனியில் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் முதல்வர் ஸ்டாலின் பிரச்சார வாகனத்திலிருந்து இறங்கி நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.