
பேருந்து கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க. மற்றும் தோழமை கட்சி சார்பில் கரூர் லைட்ஹவுஸ் கார்னரில் பொது கூட்டம் நடைபெற்றது, இதில் சிறப்பு விருந்தினராக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு கலந்து கொண்டு பேசினார்.
திமுக, காங்கிரஸ் கூட்டணி நன்றாக உள்ளது. பிரதமர் மோடி நிறைய விஷயங்கள் சொல்வார், ஆனால் எதையும் செய்ய மாட்டார். இந்தியா பல்வேறு மதம், ஜாதிகள் கொண்ட நாடு. ஆனால் பாஜக நாடு முழுவதும் ஒரே மதம், ஒரே நாடு என்ற கொள்கையோடு செயல்படுகிறது. இந்தக் கட்சி தேவையா என்பதை பொதுமக்கள் சிந்திக்க வேண்டும். பேருந்து கட்டண உயர்வால் தமிழக மக்கள் அவதிப்படுகிறார்கள். தோல்வி பயத்தில்தான் உள்ளாட்சித் தேர்தலை அதிமுக அரசு சந்திக்கத் தயங்குகிறது. ஜிஎஸ்டியால் கரூரில் கொசுவலை, ஜவுளி உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கு எதுவும் செய்ய மாட்டோம். ஆனால் அங்கு காலூன்றுவோம் என பாஜக கூறுவது எப்படி சாத்தியம்?. ஜிஎஸ்டி, பணமதிப்பு இழப்பு கொள்கையால் எல்லையில் தீவிரவாதம் இருக்காது என்றார் மோடி. ஆனால் எல்லையில் எத்தனையோ ராணுவ வீரர்களை இழந்துவிட்டோம்.
60ஆண்டுகளில் இந்தியா டிஜிட்டல் மயமாகவும், தொழில் ரீதியாகவும் முன்னேறியிருக்கிறது என்றால் அது காங்கிரஸால்தான், பாஜகவால் அல்ல. அமித்ஷா பக்கோடா விற்பது நல்ல தொழில் எனக் கூறியிருக்கிறார். முதலில் அத்தொழிலை அவர் தனது மகனுக்கு சொல்லிக்கொடுக்கட்டும்.
சட்டசபையில் ஜெயலலிதா புகைப்படம் திறந்தது சட்டப்படி தவறானது. ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் சொத்து குவிப்பு வழக்கில் அவர் சிறை சென்றிருப்பார். ஜெயலலிதா படத்திறப்புக்கு விஜயதரணி எம்.எல்.ஏ. ஆதரவு தெரிவித்தது குறித்து கட்சி தலைமை பார்த்துக்கொள்ளும்.
தமிழகத்தில் காமராஜர் ஆட்சி மலர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். எனவே காமராஜர் ஆட்சி விரைவில் மலரும். அதற்கான நேரம் காலம் வரும். காங்கிரசில் கோஷ்டி பூசல் இருப்பது உண்மை தான். பல கோஷ்டிகளாக இருந்தாலும் ஒரே கட்சியில் தான் இருக்கிறோம். கோஷ்டி பூசலால் கட்சி வளர்ச்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை. அ.தி.மு.க.வை போல பல அணிகளாக யாரும் பிரிந்து செல்லவில்லை.
நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் என யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ரஜினிகாந்த், கமல் ஆகியோர் கட்சி தொடங்கி அரசியலில் முதலில் ஈடுபடட்டும். அதன்பிறகு எனது கருத்தை தெரிவிக்கிறேன்.
அவர்களது அரசியலை மக்கள் தீர்மானிப்பார்கள். காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என தமிழக காங்கிரஸ் வலியுறுத்தும் என்று கூறினார்.
- ஜெ.டி.ஆர்