சமீபத்தில் ஜெயலலிதா நினைத்திருந்தால் தனக்கு நல்ல துறையை கொடுத்திருக்கலாம் என்றும், ஆனால் கதர்துறையை தான் அவர் கொடுத்தார் எனப் பேசி சர்ச்சையில் சிக்கினார் அமைச்சர் பாஸ்கரன். அதற்கு முன்பு பாஜகவுடன் கூட்டணியை கழட்டி விட நேரம் பார்த்துக்கொண்டிருக்கிறோம் சரியான நேரம் வரும் போது பாஜகவை கூட்டணியில் இருந்து கழட்டி விடுவோம் என்றும் பேசினார். அமைச்சரின் பேச்சால் அதிருப்தியில் அதிமுக தலைமை இருந்தது. இதனால் அமைச்சர்களுடனான சந்திப்பில் கூட, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக கண்டித்து அமைச்சர் பாஸ்கரனை அனுப்பிவைத்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள தனியார் கல்லூரி விழாவில் பேசிய அமைச்சர் பாஸ்கரன், நான் சட்டசபைக்கு செல்லும்போது எளிமையாக சென்று யாருடனும் பேசாமல் அமைதியாக இருப்பேன். மற்ற அமைச்சர்கள் கூட்டு சேர்ந்து கொண்டு பந்தா காட்டுகின்றனர். நான் அவர்கள் மாதிரி பந்தா காட்டுவது இல்லை. நான் பெரிய மீசை வைத்திருப்பதால் எல்லோரும் என்னை ஆசையாக சிங்கம் என்று தான் சொல்லுவார்கள்.
அது போல் நான் மிகவும் கட்டுப்பாடுடன் இருப்பதால் திமுக எம்.எல்.ஏ மகேஷ் என்னை சட்டசபையில் பாராட்டி பேசினார். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாததால் தவறான வழியில் செல்ல வாய்ப்பு அதிகமாக உள்ளது. இன்றைக்கு நிறைய இளைஞர்கள் செல்போனை கையில் வைத்துக்கொண்டு பைத்தியம் பிடித்தவர் போல் பேசிக்கொண்டு திரிகின்றனர். பெண்கள் படித்து முடித்துவிட்டு எப்போது திருமணம் செய்து வைப்பார்கள் என்று எதிர்பார்க்காமல் வேலைக்கு செல்ல முயற்சி எடுக்க வேண்டும் என்றும் பாஸ்கரன் பேசினார்.