கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்துவரும் காங்கிரஸ் கட்சியின் விஜயதாரணி தான், தமிழ்நாட்டின் தற்போதைய ஹாட் டாக்.
கடந்த மூன்று முறையாக தொடர்ந்து விளவங்கோடு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வான காங்கிரஸைச் சேர்ந்த விஜயதாரணி, தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் பா.ஜ.க.வில் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகியிருப்பது காங்கிரஸ் ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸைச் சேர்ந்த சிலர் இது குறித்து பேசும்போது, வெகுகாலமாக காங்கிரஸில் இருந்து வரும் விஜயதாரணி, 2021ல் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றபோது, சட்டமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்தார். அது கிடைக்காமல் போக பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி கிடைக்கும் என நினைத்தார். ஆனால், சமீபத்தில் அந்தப் பதவி சட்டமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் தான் இது போன்ற தகவல்கள் வெளியாகியுள்ளன என்கின்றனர்.
மேலும், விரைவில் பிரதமர் மோடி தமிழ்நாடு வரவிருக்கிறார். அப்போது விஜயதாரணி பா.ஜ.க.வில் இணைவார் என்றும் சொல்லப்படுகிறது. இதற்கு ஏற்றார் போல், காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணியும் கடந்த சில தினங்களாக டெல்லியில் இருந்து வருகிறார்.
இப்படியான சூழலில் விஜயதாரணி குறித்து பல்வேறு தகவல்கள் கடந்த ஓரிரு தினங்களாக அரசியல் வட்டாரங்களில் சுழன்று கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் விளக்கம் கொடுத்திருக்கிறார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை.
நேற்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் இந்த நிதி ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன்பிறகு சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ, “வழக்கறிஞரான விஜயதாரணி மூன்று முறை எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர். பிள்ளை பிடிக்கும் பா.ஜ.க., யார் யாரெல்லாம் திறமையாக இருக்கிறார்களோ, விவரமாக இருக்கிறார்களோ அவர்களை பிடிக்கலாமா என்று வலை வீசுவார்கள். ஆனால், அவர்கள் வீசும் வலைக்கு எங்கள் விஜயதாரணி சிக்க மாட்டார். அவர் ஒரு வழக்கு தொடர்பாக டெல்லி சென்றிருக்கிறார்” என்றார்.