தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், தெலுங்கானா மாநில கவர்னராக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து தமிழக பாஜக தலைவர் பதவி மற்றும் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் தமிழிசை சவுந்தரராஜன் ராஜினாமா செய்தார். பின்பு தெலுங்கானா மாநில கவர்னராக செப்டம்பர் 08ஆம் தேதி பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு தெலுங்கானா மாநில ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ராகவேந்திரா எஸ்.சவுகான் தமிழிசைக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து ஓபிஎஸ் மற்றும் தமிழக அமைச்சர்கள் சிலர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் தெலுங்கானா கவர்னராக பதவி ஏற்ற தமிழிசை, மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்க போவதாக கூறியுள்ளார். இதற்கு முன்பு புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி மக்களை நேரடியாக சந்தித்து குறைகள் கேட்டது அங்கி இருக்கும் அரசியல் கட்சி மற்றும் ஆளுங்கட்சிக்கு அதிருப்தி ஏற்பட்டது. தற்போது தமிழிசை கூறியிருப்பதும் தெலுங்கானா ஆளுங்கட்சிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்கின்றனர். இது பற்றி விசாரித்த போது, தெலுங்கானாவில் மஜ்லிஸ் பச்சோ தெக்ரிக் அமைப்பின் தலைவர் தமிழிசைக்கு ஒரு ட்விட் செய்துள்ளார். அதில் நீங்கள் வாரத்துக்கு ஒரு முறை மக்களை சந்தித்து குறைகளை கேட்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
அதற்கு பதிலளிக்கும் வகையில் வாழ்த்துக்கு நன்றி என்றும், நீங்கள் கூறிய ஆலோசனை என் மனதிலும் உள்ளது என்று கூறியுள்ளார். தமிழிசை இப்படி கூறியதற்கு தெலுங்கானாவில் இருக்கும் அரசியல் கட்சியினர் இது அரசியலமைப்பு அதிகாரத்தை மீறும் செயல் என்றுதெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தெலுங்கானா கட்சி செய்தி தொடர்பாளரும், அக்கட்சியின் சட்டமன்ற கொறடாவுமான வல்லா ராஜேஷ்வர் ரெட்டி இது பற்றி கூறும் போது, எந்த மாநிலத்திலாவது கவர்னர் இது போன்ற மக்கள் சந்திப்புகளை நடத்துகிறார்களா என்று நினைத்து பார்க்க வேண்டும். மேலும் அரசியலமைப்பு நடைமுறையில் அப்படி இருந்தால் அதை யாரும் எதிர்க்கப்போவது இல்லை எனவும் கூறினார். தமிழிசை பதவி ஏற்ற ஒரு வாரத்தில் அதிகார சர்ச்சை தெலுங்கானாவில் உருவாகி உள்ளதை அரசியல் பார்வையாளர்கள் விமர்சித்து வருகின்றனர்.