சிதம்பரத்தில் கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மறைந்த தலைவர் எல். இளையபெருமாள் நூற்றாண்டு விழா நடத்துவது குறித்து கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் செந்தில் நாதன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராகக் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கலந்து கொண்டார். முன்னதாக நகர தலைவர் தில்லை மக்கீன் அனைவரையும் வரவேற்றார். மாநிலச் செயலாளர் பி.பி.கே.சித்தார்த்தன், பி.சேரன், பொதுக்குழு உறுப்பினர் ஜெமின் எம்.என்.ராதா, மாவட்ட துணைத் தலைவர் ராஜா சம்பத்குமார், எல்.இ.பி. ஜோதிமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் டாக்டர் செந்தில்வேலன், மாவட்ட தொண்டரணி தலைவர் தில்லை கோ.குமார், விவசாய சங்கத் தலைவர் கே.வி.இளங்கீரன், வட்டாரத் தலைவர் சுந்தரராஜன், மகளிரணி தில்லை செல்வி, ஜனகம், மாலா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், ''முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் எல். இளையபெருமாள் நூற்றாண்டு விழா தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற உள்ளது. தமிழக முதல்வர் இளையபெருமாளின் சமூக பணியை அறிந்து அவருக்கு சிதம்பரத்தில் நினைவு மண்டபம் அமைக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தொழில்நுட்பங்கள் வளர்ந்த இந்த நூற்றாண்டில் மிகப்பெரிய விபத்து ஒடிசா ரயில் விபத்தாகும். 275க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமுற்றுள்ளனர். இந்த விபத்திற்கு காரணம் மனித தவறுதான். அதனைக் கையாண்ட மனிதர்களான அதிகாரிகள், பணியாளர்கள் தவறு செய்துள்ளார்கள். மோடி தலைமையிலான மோசமான நிர்வாகத்தால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இது இயல்பான விபத்தல்ல, நிர்வாகக் கோளாறினால் ஏற்பட்ட விபத்து. நானும் ரயிலில் தான் அதிக பயணம் செய்கிறேன். இந்தக் கோர விபத்தால் ரயிலில் பயணம் செய்பவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
தமிழகத்தை பொறுத்தவரை காவிரி என்பது நம் உயிர் மூச்சு. காவிரி நதி தோன்றியதிலிருந்து தமிழகத்திற்கு பலனும் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் பருவ மழை காலங்களில் 20 லட்சம் கன அடி தண்ணீரை தமிழக காவிரி டெல்டா கடைமடை பகுதிகளில் திறந்து விடுவதால் வெள்ளப் பெருக்கெடுத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. ஆனால் மேகதாது அணை பிரச்சனையில் பாஜகவினர் தமிழக காங்கிரஸை விமர்சிக்கிறார்கள். கர்நாடகத்தில் பாஜக அரசு இருந்தபோது அன்றைய முதல்வர் பொம்மை மேகதாது அணை கட்ட ரூ. 1000 கோடி நிதி ஒதுக்கினார். அப்போது ஏன் தமிழக பாஜக எதிர்க்கவில்லை.
அப்போது திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள்தான் எதிர்த்தது. மேலும் 2017 ஆம் ஆண்டு மேகதாது அணை கட்ட விரிவாகத் திட்ட அறிக்கை தயாரிக்க, தமிழக அரசை ஆலோசிக்காமல் மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அனுமதி அளித்தது. 2018 நவம்பர் 22ல் மேகதாது அணை கட்ட சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்தது பாஜக அரசு. இதற்குத் தமிழக பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழக அரசு அனுமதி மற்றும் ஒப்புதல் இன்றி மேகதாது அணை கட்டக்கூடாது.
இந்தியாவில் 30 கோடி மக்கள் சிறுபான்மையினர். 25 கோடி மக்கள் தலித்துக்கள். ஆகம விதிப்படி தலித்துகளை இந்துக்களாக பாஜக ஏற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில் 55 கோடி மக்களைப் புறந்தள்ளியும், மற்ற மதத் தலைவர்களை அழைக்காமல், சைவ ஆதீனங்களை மட்டும் அழைத்து நரேந்திமோடி நாடாளுமன்றத்தை திறந்து அம்பேத்கர் இயற்றிய சட்டத்தைப் புறந்தள்ளியுள்ளார். இதற்காக மோடி மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்ய வேண்டும்'' என்றார்.