இந்தியாவில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்த அதிகரித்துக் கொண்டே வருகிறது. மன்மோகன் சிங், ராகுல் காந்தி, மத்திய அமைச்சர் ரமேஷ் போக்கிரியால் உள்ளிட்ட அரசியல் கட்சியினருக்கும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இந்தநிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மகன் ஆசிஷ் யெச்சூரி, கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 34. ஆசிஷ் யெச்சூரியின் மரணத்திற்குப் பிரதமர் மோடி, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் ஆசிஷ் யெச்சூரி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர், “இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தேசியச் செயலாளர் தோழர் சீதாராம் யெச்சூரியின் மகனும் ஊடகவியலாளருமான ஆசிஷ் கரோனாவால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தோம். அவருக்கு எமது அஞ்சலியையும் அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் எனது இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
மறைந்த ஆசிஷ், தமது தந்தையைப் போலவே உழைக்கும் மக்கள் மீது பற்றும் இடதுசாரி அரசியலில் ஈடுபாடும் கொண்டவராக விளங்கியவர். எதிர்காலத்தில் ஒரு நல்ல தலைவராக வருவார் என்ற நம்பிக்கையை அளித்தவர். அவரது திடீர் மரணம் உழைக்கும் மக்களுக்குப் பேரிழப்பு ஆகும்.
கரோனா கொடுந்தொற்றின் இரண்டாவது அலை மிக மூர்க்கமாக மக்களை தாக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் மத்திய அரசோ மக்களைப்பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் இந்தச் சூழலிலும் முதலாளிகளுக்கு லாபம் ஈட்டித் தரும் தரகு வேலையிலேயே ஆர்வமாக இருக்கிறது. கரோனா தடுப்பூசியை மத்திய அரசுக்கு ஒரு விலை, மாநில அரசுகளுக்கு ஒரு விலை, தனியாருக்கு ஒரு விலை எனத் தடுப்பூசி நிறுவனங்கள் விற்றுக் கொள்ளலாம் என்று மோடி அரசு அனுமதித்துள்ளது. இது மக்கள் மீது ஏவப்பட்டிருக்கிற மிகப்பெரிய வன்முறையே ஆகும். பணம் உள்ளவர்களுக்கு தடுப்பூசி, பணம் இல்லாதவர்களுடைய உயிரைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை என்ற மோடி அரசின் அணுகுமுறை கடும் கண்டனத்துக்குரியதாகும்.
கரோனா தடுப்புக்காக மக்களால் பயன்படுத்தப்படும் மாஸ்க்குகள், சானிடைசர்கள், பிபிஇ உபகரணங்கள், சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகள் அனைத்தின்மீதும் ஜிஎஸ்டி வரியை விதித்து மக்களை இந்த நேரத்திலும் சுரண்டுகிறது மோடி அரசு.
மத்திய அரசு மக்களைப்பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாத நிலையில் நம்மை நாமே பாதுகாத்துக்கொண்டால்தான் உண்டு. இதைப் புரிந்து கொண்டு பொதுமக்களும் பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டும். மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளபடி முகக் கவசம் அணிதல், இடைவெளியைக் கடைப்பிடித்தல், கூட்டங்களைத் தவிர்த்தல் உள்ளிட்ட நடைமுறைகளைத் தவறாமல் பின்பற்றவேண்டும். தேவையில்லாத நடமாட்டங்களைக் குறைத்துக் கொள்வது நல்லது.
தடுப்பூசி போட்டுக்கொள்வது கரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள உதவும் என்பது உலக அளவில் நிறுவப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தயங்காமல் யாவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.