கடந்த சட்டமன்றத் தேர்தலை தனித்து சந்தித்த பாமக எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை. அதனைத் தொடர்ந்து நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது. அந்தத் தேர்தலிலும் எந்த இடத்திலும் பாமக வெற்றி பெறவில்லை. அப்போது போட்ட கூட்டணி ஒப்பந்தத்தின்படி பாமகவின் இளைஞரணித் தலைவரான அன்புமணி ராமதாஸ் ராஜ்யசபா உறுப்பினரானார். சமீபத்தில் நடந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிபெற பாமகவின் முழு பலத்தை காண்பித்ததுதான் என்று அக்கட்சியினர் உற்சாகத்துடன் உள்ளனர்.
இந்த நிலையில் டிசம்பரில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டால் அதில் போதிய இடங்களை கூட்டணியில் பெற வேண்டும் என்பதற்காகவும், அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலுக்குள் கட்சியை மேலும் பலப்படுத்தவும் அரசியல் ஆலோசனைக் குழு ஒன்றை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அமைத்துள்ளார்.
பாமகவின் முன்னாள் தலைவராக இருந்த பேராசிரியர் தீரனை அரசியல் ஆலோசனைக் குழுவின் தலைவராக நியமித்துள்ளார். மேலும் அந்த குழுவில் முன்னாள் மத்திய இணை அமைச்சராக இருந்த அரங்க வேலு, முன்னாள் எம்எல்ஏ இரா.கோவிந்தசாமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.