சென்னை ராயப்பேட்டை அருகே கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். சென்னையில் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி மயக்கமடைந்த தம்பியை காப்பாற்றிய அண்ணன் விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை ராயப்பேட்டையில் எக்ஸ்பிரஸ் அவென்யூ ஹாப்பிங் மாலின் கீழ் தளத்தில் கழிவுநீர் தொட்டி அமைக்கப்பட்டிருக்கிறது. இதனை சுத்தம் செய்வதற்காக இன்று அதிகாலை 4 மணியளவில் ஐஸ் ஹவுஸ் பகுதியை சேர்ந்த தண்டபாணி என்பவர் அருண்குமார், ரஞ்சித்குமார், யுவராஜ், அஜித்குமார், ஸ்ரீநாத் ஆகிய 5 பேரை அழைத்து சென்றுள்ளார். இவர்களில் ரஞ்சித்குமார் கழிவுநீர் தொட்டியில் சுத்தம் செய்து கொண்டிருந்த போது விஷவாயு தாக்கி மயக்கமடைந்தார். இதை கண்ட அவரது அண்ணன் அருண்குமார், தம்பியை காப்பாற்றுவதற்கு கழிவுநீர் தொட்டியில் இறங்கி மேலே தூக்கி விட்டார். பிறகு அவர் மேலே ஏற முயன்றபோது, விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
கழிவுகளை அகற்றும் பணியின் போது விஷவாயு தாக்கி உயிரிழந்தோர் 1993 முதல், இன்று வரை 206 பேர்! இதில் தமிழகம் முதலிடம் என்பது அனைவருக்கும் தலைகுனிவு!
— M.K.Stalin (@mkstalin) November 13, 2019
இதில் தி.மு.க. ஆட்சிக் காலமும் உண்டு. அரசு மட்டுமல்ல அனைவரும் சேர்ந்து இச்சமூக அவலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். pic.twitter.com/0WiBDCPkaY
இந்த சம்பவம் குறித்து பல்வேறு தரப்பினர் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, ஷாப்பிங் மால் உரிமையாளர்கள், நிர்வாகிகள், ஒப்பந்தகாரர் ஆகியோர் மீது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் இச்சம்பவம் குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், 'விஷவாயு தாக்கி கடந்த 1993 முதல் இன்று வரை 206 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. நம் அனைவருக்கும் இது தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது' என கூறியுள்ளார். மேலும் 'மனிதர்களை இத்தகைய தொழிலில் ஈடுபடுத்தக் கூடாது என்பதே திராவிட இயக்கக் கொள்கை' எனவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் விஷவாயு தாக்கி அதிகம் பேர் உயிரிழந்த மாநிலத்தில் தமிழகம் முதலிடத்திலும், பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் இரண்டாவது இடத்திலும் இருப்பதாக சொல்லப்படுகிறது.