நேற்று தமிழக ஆளுநர் உட்பட 5 மாநில ஆளுநர்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அமித்ஷாவை சந்தித்து தமிழக அரசியல் நிலவரங்கள் பற்றி பேசியிருக்கிறார். பாஜக தலைமை அதிமுக மீது அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. சமீப காலமாக எடப்பாடி தரப்பு வைத்த எந்த கோரிக்கையும் பாஜக தலைமை கண்டுகொள்வதில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் அதிமுக, பாஜக கூட்டணி படு தோல்வி அடைந்ததிலிருந்தே எடப்பாடி அரசு மீது பாஜக அதிருப்தியில் இருக்கும் நிலையில் எடப்பாடி தரப்பு பாஜக மேலிடத்தை சரி செய்ய எடுத்த அனைத்து முடிவுகளும் தோல்வியடைந்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு பின்புதான் அமித்ஷாவிடம் இருந்து தமிழக ஆளுநருக்கு அழைப்பு வந்திருக்கிறது. தமிழக ஆளுநரை அமித்ஷா சந்தித்துப் பேசிய நிலையில் தமிழகத்தில் முதல்வர் மாற்றம் அல்லது ஆட்சிக் கலைப்பு என்ற அச்சம் எடப்பாடி தரப்புக்கு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
மேலும் பாஜக தலைமையின் ஆதரவு ஓ.பன்னீர்செல்வத்துக்கு உள்ளதால் தமிழகத்தில் எடப்பாடிக்கு பதிலாக பன்னீர்செல்வத்தை முதல்வராக்கும் முயற்சியில் பாஜக தலைமை இறங்கியிருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் அதிமுகவில் ஒரு சில மாற்றங்கள் செய்வது குறித்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.