கடந்த சனிக்கிழமை அதிகாலை தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை திடீரென்று போலீஸ் கைது செய்ய, பின்பு ஜாமீனில் வெளியே வந்துவிட்டார். இது பற்றி விசாரித்த போது, ஜெ’ ஆட்சிக் காலம் மாதிரி நள்ளிரவு கைது- அதிகாலைக் கைது என்று எடப்பாடி அரசும் ஆரம்பித்து விட்டது என்று கூறுகின்றனர். அன்பகத்தில், பிப்ரவரி 14-ல் நடந்த கலைஞர் வாசகர் வட்டக் கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி, பட்டியல் இன மக்கள் பற்றிச் சொன்ன சில வார்த்தைகள் அப்போதே சர்ச்சையைக் கிளப்பியது. ஆர்.எஸ்.பாரதி அதற்கு வருத்தம் தெரிவித்த போதும், புகார் தெரிவிக்கப்பட்டு, எஃப்.ஐ.ஆரும் போடப்பட்டது. அது சம்பந்தமாக ஆர்.எஸ்.பாரதி போட்டிருந்த முன்ஜாமீன் மனு மே 27 ஆம் தேதி விசாரணைக்கு வர இருந்த நிலையில்தான் 23 ஆம் தேதி அதிகாலையில் அவர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். வழக்குப் பதிவாகி 100 நாள் கடந்த நிலையில் இந்தக் கைது நடந்திருக்கிறது.
அதாவது, "தி.மு.க.வின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த வி.பி.துரைசாமி, அதுக்கு முதல் நாள்தான் பா.ஜ.க.வில் ஐக்கியமாகி இருந்தார். அவர், மாநில பா.ஜ.க. தலைவரான முருகனிடம், தி.மு.க.வில் நானும் சாதிய ஒடுக்கு முறையை அனுபவித்து இருக்கிறேன். ஆர்.எஸ்.பாரதி போல் பலரும் அங்கே சாதிய உணர்வோடு, பட்டியல் இனமக்களை நடத்துகிறார்கள் எனச் சொல்லியிருக்கிறார். உடனே முருகன், இதை பா.ஜ.க.வின் அகில இந்தியத் தலைவரான நட்டாவின் கவனத்துக்குக் கொண்டு போக, இதைத் தொடர்ந்து ஆ.எஸ்.பாரதி மீது நடவடிக்கை எடுக்கும் படி, டெல்லியில் இருந்து எடப்பாடிக்கு சிக்னல் கொடுக்கப்பட்டதால தான் இந்த நடவடிக்கை என்கின்றனர்.
மேலும் எடப்பாடி அரசின் ஊழல்களை வெளிக்கொண்டு வருவதால்தான் தன்னைக் கைது செய்ததாக ஆர்.எஸ்.பாரதி கூறினார். தி.மு.க.வின் சட்டத் துறைச் செயலாளராக இருந்து சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவையே சிறைக்கு அனுப்பும் அளவுக்கு செயல்பட்டவர் ஆர்.எஸ். பாரதி. தற்போது ஓ.பி.எஸ். துறை ஊழல்கள், வேலுமணியின் ப்ளீச்சிங் பவுடர் ஊழல்கள் தொடர்பாக டாக்குமெண்ட்டுகளைச் சேகரித்து வந்த நிலையில் கைது செய்ததாகவும் சீப்பை ஒளித்து வைத்தால் திருமணத்தை நிறுத்த முடியாது என்றும் ஆர்.எஸ்.பாரதி கூறியிருந்தார்.
இதனையடுத்து 79 வயதாகும் ஆர்.எஸ்.பாரதியை அதிகாலையில் கைது செய்த தகவல் கிடைத்ததும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஷாக் ஆயிட்டார். அதைப் புரிந்து கொண்டு வில்சன் எம்.பி. உள்ளிட்ட தி.மு.க. வழக்கறிஞர்கள் கோர்ட்டில் கூடினார்கள். அதே நேரத்தில், அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை, இதனை அரசியல்ரீதியாக ஸ்ட்ராங்காக்க நினைத்தது. சட்ட ரீதியாக வழக்கு வலுப்படுவதை விரும்பவில்லை. தி.மு.க.வை தலித் விரோத கட்சியாகப் பிரச்சாரம் செய்து, தேர்தல் வியூகம் வகுக்க இதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதுதான் எடப்பாடி வியூகம். அதேநேரத்தில், வன்கொடுமை தடுப்புச் சட்டம் விஷயத்தில் அவர் தனது கொங்கு பெல்ட்டின் மனநிலை பற்றி யோசித்துள்ளார். வழக்கைப் பலப்படுத்தினால், அது தன் ஏரியாவில் விவாதத்தையும் விமர்சனத்தையும் உருவாக்கும் என்பதால், ஆர்.எஸ்.பாரதிக்கான ஜாமீன் விஷயத்தில் பெரியளவில் எதிர்ப்பை அரசுத் தரப்பு காட்டவில்லை. இதன்மூலம் தன் மனநிலையை கொங்கு பெல்ட்டுக்கு எடப்பாடி தெரிவித்து விட்டார் என்று அவர் தரப்பில் உள்ளவர்கள் கூறிவருகிறார்கள்.