கர்நாடக மாநிலம் மல்லேஸ்வராவில் உள்ள பாஜக மாநில ஊடக மையத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “ஒரு குடும்பம் கட்சியிலும் மாநிலத்திலும் எந்த முடிவுகளையும் எடுக்கலாம் என இருந்தால் அது தான் வாரிசு அரசியல். வாரிசு அரசியல் என்பது காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, டி.ஆர்.எஸ்., மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சி என அனைத்திலும் இருக்கிறது. பாஜகவில் அப்படி இல்லையே. பாஜகவிலும் வாரிசு அரசியல் இருக்கிறது என எதை வைத்து சொல்கிறீர்கள்.
அனைத்து கட்சிகளிலும் அப்பா, மகன் சீட்டு வாங்கி எம்.எல்.ஏ ஆகிற விஷயங்கள் நடக்கிறது. ஜனநாயகத்தின் ஒரு பகுதி தான் அது. வாரிசு அரசியல் என்பது ஒரு குடும்பமே கட்சியை கட்டுப்படுத்துவது தான்.
ஆனால், நீங்கள் சொல்லும் பெயர்களைக் கொண்டவர்கள் கட்சியில் முக்கியப் பதவியில் இல்லை. தேர்தல் மேலாண்மை கமிட்டியில் இல்லை. பார்லிமெண்ட் போர்டு மெம்பர் இல்லை. இவர்கள் எல்லாம் தொண்டர்கள் மட்டுமே. அவர்களுக்கு வாக்களிக்க வேண்டுமா வேண்டாமா என்பதை கர்நாடக மக்கள் முடிவு செய்யட்டும். மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இதை வாரிசு அரசியல் எனச் சொன்னால் உங்கள் சிந்தனையில் தவறு உள்ளது என அர்த்தம்” எனக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர் வேறு ஒரு கேள்வியைக் கேட்டார். அதற்குப் பதிலளித்த அண்ணாமலை, “என்னுடைய விளக்கத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். இல்லையென்றால் விட்டுவிடுங்கள். உங்கள் தலையில் துப்பாக்கி வைத்து நான் பேசுவதை டி.வி.யில் காட்டவேண்டும் என்று கேட்கவில்லை. இங்கு மக்கள் முடிவு செய்யட்டும். உங்கள் கேள்விக்கு நான் பதில் சொல்லிவிட்டேன். அண்ணாமலையின் பதில் நன்றாக இருந்ததா என்பதை பார்வையாளர்கள் முடிவு செய்யட்டும்” எனக் கூறினார்.