நேற்று (12.07.2019) சட்டமன்றத்தில் கைத்தறி மற்றும் கதர்த்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடந்தது.
அப்போது பேசிய திமுக உறுப்பினர் சுந்தர், நடந்துமுடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது. அதிமுக ஒரு இடத்தில் மட்டுமே வென்றது என்று கூறினார்.
அப்போது பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மக்களவை தேர்தலில் தவறான வாக்குறுதிகளை கொடுத்து திமுக வெற்றிபெற்று விட்டதாக தெரிவித்தார். அமைச்சர் ஜெயக்குமார், தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் அதிகமுறை தோல்வியடைந்த கட்சி திமுக என்றும், அதிகமுறை ஆட்சியை பிடித்த கட்சி அதிமுக என்றும் தெரிவித்தார். மேலும் திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற 15 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும் என்றும், ஆனால், அந்த அளவிற்கு இங்கு பணம் உள்ளதா என்றும் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய திமுக உறுப்பினர் சுந்தர், அதிமுக வெற்றி பெற்ற தேனி தொகுதிக்கு உட்பட்ட இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது என்றும், அடுத்து நடக்கவுள்ள வேலூர் மக்களவை தேர்தலிலும் திமுகவே வெற்றிக்கொடி நாட்டும் எனவும் தெரிவித்தார்.
இதைமறித்த அமைச்சர் ஜெயக்குமார், திமுகவினரை பல ஆண்டுகள் கோட்டைப்பக்கமே தலைகாட்டவிடாமல் செய்தவர் எம்.ஜி.ஆர். என ஆவேசமாக தெரிவித்தார்.
இதனால் ஆவேசமடைந்த சுந்தர், உங்கள் தலைவர் ஜெயலலிதா 1996 தேர்தலில் தோல்வியை தழுவியவர் ஆனால், முன்னாள் திமுக தலைவர் கலைஞர் தேர்தலில் தோல்வியையே தழுவாதவர் எனக்கூறினார். இதனால் சட்டமன்றத்தில் சலசலப்பு ஏற்பட்டது.