பாஜகவின் தலையீட்டால் பதிவு செய்யப்படாத டிடிவி தினகரன் கட்சிக்கு அனைத்து தொகுதிக்கும் பொது சின்னத்தை வழங்கியதன் மூலம் தேர்தல் ஆணையம் தனது சுதந்திரத்தை இழந்து விட்டது என மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா குற்றச்சாட்டினார்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் பதினெட்டு சட்டமன்ற இடைத்தேர்தல் வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வருவதையொட்டி தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அந்தந்த கட்சித் தலைவர்களும், கூட்டணி கட்சித் தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திருவாரூரில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திருவாரூர் சட்டமன்ற வேட்பாளர் பூண்டி கலைவாணன், நாகை நாடாளுமன்ற வேட்பாளர் செல்வராசு ஆகியோரை ஆதரித்து மனிதநேய மக்கள் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் அக்கட்சியின் மாவட்ட தலைவர் பஜிலுல் ஹக் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா சிறப்புரையாற்றினார். முன்னதாக பத்திரிக்கையாளர்களை சந்தித்து அவர் கூறுகையில் ‘’மோடி அரசு தோல்விக்கு பயந்தே திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டிலும், அலுவலகத்திலும் வருமான வரி சோதனை நடத்தியுள்ளது. மேலும் பாஜகவுக்கு ஆதரவாக டிடிவி தினகரன் களமிறங்கியுள்ளார். பாஜகவின் தலையீட்டால் பதிவு செய்யப்படாத டிடிவி தினகரன் கட்சிக்கு அனைத்து தொகுதிக்கும் பொது சின்னத்தை வழங்கியதன் மூலம் தேர்தல் ஆணையம் தனது சுதந்திரத்தை இழந்து விட்டது. தொடர்ந்து மோடி தமிழகத்திற்கு வரும் பொழுதெல்லாம்மோடியே திரும்பி போ என்று தமிழக மக்கள் போரடியது போல்வருகின்ற தேர்தலில் தங்கள் வாக்குகள் மூலம் பாஜகவே மீண்டும் ஆட்சிக்கு வராதே என்று நிலைநாட்டுவார்கள்.’’ என்றார்.