தி.மு.க.வில் பொதுச் செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர். பாலுவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், நீண்ட காலமாக அமைதியாக இருக்கிற மறைந்த தி.மு.க தலைவர் கலைஞரின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் ஆங்காங்கே வெளிப்படையாக குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர்.
மு.க.அழகிரியை அரசியல் களத்திற்கு அழைக்கும் வகையில் போஸ்டர் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள், கொங்கு மண்டலமான ஈரோட்டில் திடீரென 4 -ஆம் தேதி காலையில் கருங்கல்பாளையம், மணிக்கூண்டு, பன்னீர்செல்வம் பூங்கா, பெருந்துறை ரோடு, சோலார் உள்ளிட்ட பல பகுதிகளில் ஒரு பரபரப்பு போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.
அந்த போஸ்டரில் "அஞ்சா நெஞ்சரே மௌனத்தை கலைத்துவிட்டு கலைஞரின் தொண்டர்களைக் காப்பாற்று" என்று வசனங்கள் இடம்பெற்றிருந்தது. அந்த போஸ்டரை அடித்து ஒட்டியவர் கருங்கல்பாளையம் பகுதி தி.மு.க. அவை தலைவரும் முன்னாள் நகர்மன்ற உறுப்பினருமான குரு.பெரியசாமி என இடம் பெற்றிருந்தது. இதுபற்றி ஈரோடு தி.மு.க நிர்வாகிகளிடம் கேட்டபோது "அந்த பெரியசாமி என்பவர் நீண்ட காலமாக கட்சிப் பணியில் ஈடுபடுவதில்லை. விளம்பரத்திற்காக இப்படி செயல்படுகிறார்" என்றனர். அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் மு.க. அழகிரியை மீண்டும் அரசியலுக்கு வரவேண்டும் என்ற வகையில் அவருக்கு ஆதரவாக இதுபோன்ற போஸ்டர் ஈரோட்டில் ஒட்டப்பட்டிருப்பது தி.மு.க.வட்டாரத்தில் பரபரப்பாய் பேசப்படுகிறது.