தி.மு.கவின் பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகளை நிரப்புவதற்காக கட்சியின் பொதுக்குழுவை வருகிற 9-ஆம் தேதி கூட்டுகிறார் மு.க.ஸ்டாலின். 'ஸும்' செயலி வழியாக நடத்தப்படும் இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் குறிப்பிட்ட சிலர் மட்டுமே பேச அனுமதிக்கப்படுவார்கள் என்கிறது அறிவாலய வட்டாரம்.
பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகன் போட்டியின்றி தேர்வு செய்யப்படவிருக்கிறார். பொருளாளர் பதவியை டி.ஆர்.பாலு, ஏ.வ.வேலு, பொன்முடி, ஐ.பெரியசாமி உள்ளிட்ட சிலர் விரும்பினாலும் டி.ஆர்.பாலுவுக்கே வாய்ப்பு அதிகம் உள்ளது. துரைமுருகன் போன்றே டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என்கிறார்கள்.
இதற்கிடையே இந்த பொதுக்குழுவில், சில புதிய பொறுப்புகள் உருவாக்கப்படும் என்றும் அறிவாலய வட்டாரங்களில் எதிரொலிக்கிறது. அதாவது, தலைமை நிலைய அமைப்புச் செயலாளராக கே.என். நேரு, இணைப் பொதுச் செயலாளர்களாக பொங்கலூர் நா. பழனிசாமி, பொன்முடி, எ. வ. வேலு ஆகியோர் நியமிக்கப்படவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
பொருளாளர் பதவியை எதிர்பார்க்கும் சீனியர்களை சரிகட்டவும், பொதுச்செயலாளர் என துரைமுருகன் தனி அதிகாரம் செய்யாமல் இருப்பதை தடுக்கவும் இணைப் பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்படுவதாக கிசு கிசுக்கிறது அறிவாலயம்!