திருச்சி மற்றும் தஞ்சாவூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று விமானம் மூலம் திருச்சி வந்து சேர்ந்த தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், "புதுச்சேரியில் பட்ஜெட் தாக்கல் செய்து பல நல்ல திட்டங்களை மக்களுக்கு கொடுத்துக் கொண்டுள்ளார்கள். அதற்காக முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். புதுச்சேரியில் கேஸ் சிலிண்டருக்கு மானியம் வழங்கப்படுகிறது. மத்திய அரசும் 200 ரூபாய் மானியத்தை உஜாலா திட்டத்தின் மூலம் உயர்த்தியுள்ளது. இது ஆரோக்கியமான விஷயம். தமிழகத்தில் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் அறிவித்து கொடுக்க ஆரம்பிப்பதற்கு முன்பாகவே புதுச்சேரியில் அதனை செயல்படுத்தி மகளிருக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கத் தொடங்கி விட்டார்கள். பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் காப்பீடு திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது போன்ற பல நல்ல திட்டங்களை புதுச்சேரி அரசு நிறைவேற்றிக் கொண்டுள்ளது. பிரதமர் கூறியது போல பெஸ்ட் புதுச்சேரியாக அதனை கொண்டு வர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விவகாரம் சட்டரீதியாக தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநருக்கும் உள்ள விவகாரம். அதில் நான் கருத்து கூறுவது சரியாக இருக்காது" என்றார்.
மேலும் கச்சத்தீவில் புத்தர் சிலை வைத்த விவகாரம் தொடர்பான கேள்விக்கு, "ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு பிரச்சனை இருக்கும். அந்த பிரச்சனைகளை வழிபாட்டுத் தலங்களில் கொண்டு வரக் கூடாது என்பது எனது எண்ணம். எப்போதும் எம்மதமும் சம்மதம் என்ற சூழ்நிலை இருப்பது நல்லது" எனத் தெரிவித்தார்.