தமிழக அரசு இவ்வருடம் அறிவித்துள்ள பொங்கல் பரிசு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளதாக பல்வேறு அமைப்புகள் கண்டனங்களை பதிவு செய்து வரும் நிலையில், தற்போது தமிழ் மாநில காங்கிரஸின் இளைஞர் அணி தலைவர் யுவராஜா தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் பொங்கல் பண்டிகையானது ஒவ்வொரு வருடமும் ஜனவரி 14-ம் தேதி விமர்சையாக மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் ஏழை எளிய மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக அரசு சார்பாக பொங்கல் பரிசு பொருட்கள் வழங்குவது வழக்கம். தற்போது 2023-ஆம் ஆண்டு தைப்பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூபாய் 1000 வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்தப் பொங்கல் பரிசு அறிவிப்பு மக்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பதற்கு பதில் மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. சென்ற வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தி.மு.க அரசு அறிவித்தது. இதனைப் பார்த்து பொதுமக்கள் ஆர்வத்துடன் ரேஷன் கடைகளுக்குச் சென்று வாங்கினர். ஆனால், பொருட்களின் தரத்தைப் பார்த்த பிறகு மக்கள் ஏமாற்றமும் அதிர்ச்சியும் அடைந்தனர். அப்போது எதிர்க்கட்சிகள் 500 கோடிக்கு மேல் பொங்கல் தொகுப்பில் ஊழல் நடந்துள்ளதாக அறிக்கைகள் வெளியிட்டன. இதை ஒப்புக்கொள்ளும் விதமாக முதலமைச்சர் அவர்களே பொங்கல் பரிசு சிறப்பு தொகுப்பில் தரமற்ற பொருட்கள் வழங்கியதாகவும், வழங்கிய நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்கள்.
இதற்கு முன்பு முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி பொங்கல் பரிசு 2500 ரூபாய் கொடுத்த போது, கூடுதலாக 5000 கொடுக்க வேண்டும் என்று அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் கோரிக்கை முன்வைத்திருந்தார். கொரோனா காரணமாக பெருமளவில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து விலைவாசி ஏற்றம், பருவ மழையின் தாக்கத்தால் பயிர்ச்சேதம் என பல்வேறு சிக்கலில் சிக்கி இருக்கும் மக்களுக்கு வெறும் 1000 ரொக்கம் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை அறிவித்ததற்கு பதில் பொங்கல் இல்லை என்று சொல்லிவிட்டுப் போயிருக்கலாம்.
இந்த அறிவிப்பு கீழ்த்தட்டு மக்கள் மற்றும் நடுத்தர குடும்பத்தினரிடையே பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. சென்ற அதிமுக ஆட்சியில் இதே பொங்கல் பரிசுடன் ரூ. 2500 நிவாரணத் தொகையும் கொடுத்தது. அன்றைய நேரத்தில் கொரோனா ஊரடங்கால் சிக்கித்தவித்த மக்களுக்கு பொங்கலன்று பெரும் உதவியாக இருந்தது. அரசு தருகின்ற பணத்தை யாரும் வீணாக செலவு செய்யப் போவது கிடையாது. அனைவரும் குழந்தைகளுடைய படிப்புச் செலவு அல்லது அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே இந்தப் பணம் பயன்படப் போகிறது. ஆனால் திராவிட மாடல் திராவிட மாடல் என்று கூறிக் கொள்ளும் இந்த திமுக அரசு அறிவித்துள்ள வெறும் ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை, அரசின் அறிவிப்புக்கு காத்திருந்த வாக்களித்த மக்களுக்கு 2023 பொங்கல் ஏமாற்றம் தரும் பொங்கலாக மாற்றியுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.