கலைஞர் நூற்றாண்டு நினைவை ஒட்டி நடத்தப்பட்ட நாணய வெளியீட்டு விழாவை மத்திய அரசு நடத்தியது என திமுகவும், தமிழக அரசுதான் நடத்தியது என அதிமுகவும் மாறி மாறி பதிலளித்து வருகின்றன.அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலைஞர் நாணய வெளியீட்டு விழாவை சுட்டிக்காட்டி திமுகவும் பாஜகவும் ரகசிய உறவு வைத்துள்ளதாக பேசியிருந்தார்.
அதற்கு பதிலளிக்கும் வகையில் திருவெற்றியூரில் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர் இல்லத் திருமண விழாவில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த விழாவை மத்திய அரசு தான் நடத்தியது என்றும், எந்த ஒரு அடிப்படையும் தெரியாத ஒருவர் தமிழகத்திற்கு எதிர்க்கட்சித் தலைவராக இருப்பது வேதனை தருவதாக எடப்பாடி பழனிசாமியை குறிப்பிட்டுப் பேசி இருந்தார்.
இந்நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூரில் கட்சி நிர்வாகிகளுடன் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ''கலைஞர் நாணய வெளியீட்டு விழா மாநில அரசால் நடத்தப்படுகின்ற விழா அல்ல, மத்திய அரசால் நடத்தப்படுகின்ற விழா என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சொல்கிறார். ஆனால் எனக்கு வந்த அந்த அழைப்பிதழில் மாநில அரசினுடைய எம்பலம் தான் பொறிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் தலைமை நிலையச் செயலாளர் தான் எனக்கு அழைப்பிதழைக் கொடுத்திருக்கிறார். அவருடைய பெயர் தான் அழைப்பிதழில் இடம் பெற்றிருக்கிறது. ஆகவே இது மாநில அரசு நடத்துகின்ற விழா. மத்திய அரசு நடத்துகின்ற விழா அல்ல. இது கூட தெரியாமல் இருக்கின்ற ஒரு முதலமைச்சர் என்றால் அது தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்தான்.
அது மட்டுமல்ல இதைச் சொன்ன உடனே பாஜகவை சேர்ந்த மாநிலத் தலைவருக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்து என்னை பற்றி வசைபாடி இருக்கின்றார். ஏதோ மத்தியிலே இருந்து ஆட்சியாளர்கள் வந்து இந்த நாணயத்தை வெளியிட்டால் தான் புகழ் கிடைக்கும் என்று தோரணையில் பேசியிருக்கிறார். எம்ஜிஆர் நூற்றாண்டு விழா வந்த பொழுது சிறப்புச் செய்யும் விதமாக நாங்களும் நாணயம் வெளியிட்டோம். அப்பொழுது முதலமைச்சர் என்ற முறையில் நானே வெளியிட்டேன். அதைப்பற்றி சிறுமைப்படுத்தி பேசி இருக்கின்றார் பாஜக தலைவர். ஏதோ மத்தியில் இருக்கும் ஆட்சியாளர்கள் வந்து வெளியிட்டால்தான் எம்ஜிஆருக்கு புகழ் கிடைக்கும் என்ற தோரணையில் பேசியிருக்கிறார். அது சிறுபிள்ளைத்தனமானது. பல்வேறு மசோதாக்கள் கொண்டு வந்த பொழுது அது நிறைவேற்றுவதற்கு அதிமுக தேவை. அப்பொழுது அதிமுக நன்றாக இருந்தது. இப்பொழுது உறவையும் முறிக்கும் பொழுது அதிமுக கெட்டதாக தெரிகிறது. இதுதான் பாஜகவினுடைய இரட்டை வேடம்'' என்றார்.