தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம், தி.மு.க. எம்.பி.க்களை அவமரியாதையாக நடத்திய விவகாரம், மோடி வரை பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது பற்றி விசாரித்த போது, மனுகொடுக்கச்சென்ற தி.மு.க. எம்.பி.க்களை தலைமைச் செயலாளர் அப்ரோச் பண்ணிய முறை மிகவும் மோசமாக இருந்ததாக தி.மு.க. தரப்பும், தயாநிதிமாறன் தவறாக பேசியதாக கோட்டைத் தரப்பும் குற்றம்சாட்டி வந்தனர்.
அதாவது, தி.மு.க.வின் "ஒன்றிணைவோம் வா' திட்டத்தின் மூலம் வந்த கோரிக்கைகளில் அரசுத்தரப்பு செய்ய வேண்டியவற்றை தலைமைச் செயலாளரிடம் ஒப்படைப்பதற்காக ஒரு லட்சம் மனுக்களோடு எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமி ஆகியோர் மனுக்களோடு சென்று தலைமைச் செயலாளர் சண்முகத்தைச் சந்தித்த போது பெரும் சர்ச்சை கிளம்பியது. டி.ஆர்.பாலுவும் தலைமைச் செயலாளரும் அறிக்கைப் போர் நடத்தினார்கள். தி.மு.க. தரப்பில், தலைமைச் செயலாளர் மீது மக்களவை சபாநாயகரிடம் உரிமை மீறல் பிரச்சினை கிளப்புவோம் என்று டி.ஆர்.பாலு கூறியதோடு, அதற்கான நடவடிக்கையிலும் இறங்கிவிட்டதாகச் சொல்கின்றனர்.
மேலும் சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் தி.முக. எம்.பி.க்களான டி.ஆர்.பாலுவும், தயாநிதியும் கடிதம் கொடுத்திருக்கிறார்கள். அது உடனடியாக மத்திய அமைச்சரவைச் செயலர் மூலம் பிரதமர் மோடிக்குத் தெரிவிக்கப்பட்டிருப்பதாகத் சொல்கின்றனர். தலைமைச் செயலாளர் சண்முகத்தைத் தொடர்புகொண்டு பிரதமர் அலுவலக அதிகாரிகள் விசாரித்தபோது அவர், தி.மு.க. எம்.பி.க்கள்தான் என்னை மிரட்டுவது போல் நடந்துக் கொண்டார்கள் என்று விளக்கம் கொடுத்துள்ளார். அவரின் இந்தப் பதிலைக் கடிதமாக அனுப்புங்கள் என்று டெல்லி தரப்பு கூறியதாகச் சொல்கின்றனர்.