
தருமபுர ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச் செல்ல தடைவிதித்தது வருத்தம் அளிக்கிறது என அண்மையில் மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்திருந்த நிலையில் இதுதொடர்பான விவாதங்கள் கிளம்பியுள்ளது. அதிலும், "சைவத்தையும், தமிழையும் தருமபுர ஆதீனம் பாதுகாத்து வருகிறது. தருமபுர ஆதீனம் பல்லக்கை தூக்கிச் செல்வதற்குத் தடை விதித்தது வருத்தம் அளிக்கிறது. உயிரே போனாலும் பரவாயில்லை. நானே சென்று தரும ஆதீன பல்லக்கை சுமப்பேன். என் குருவான தருமபுர ஆதீனத்தின் பட்டினப் பிரவேசத்தை உயிரைக் கொடுத்தாவது நடத்துவோம்'' என்று அவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ''என்னைப் பொறுத்தவரை ஒரு குரு என்பவர் கடவுளுக்கு சமம். மனிதன் என்ற வார்த்தையை நான் இங்கே பயன்படுத்த மாட்டேன். ஆசைப்பட்ட எல்லாவற்றையும் தாண்டி அவர்கள் குருமார்கள். ஒரு கூலியாக, ஒரு தனி மனிதனை அடிமைப்படுத்துவதற்காக அவரை தூக்குவதாக இருந்தால் பாஜக ஒருபோதும் அனுமதிக்காது. ஆனால் எந்த புரிதலும் இல்லாமல், தமிழகத்தின் ஆன்மிக மண்ணுடைய புரிதல் இல்லாமல் குரு, மாதா எதுவுமே தெரியாமல் நடந்து கொள்கிறார்கள். இது முழுவதுமே அரசியல் காரணம். இந்த குருமார்களை திட்டமிட்டு தமிழக அரசு அவமானப்படுத்துகிறது. ஆதீனங்களின் மிரட்டுகிறது. தமிழக அரசு இந்த விபரீத விளையாட்டைக் கைவிட்டுவிட வேண்டும். ஏனென்றால் இவர்கள் எல்லாம் பிறப்பதற்கு முன்னால் சித்தாந்தம் பிறப்பதற்கு முன்னால் இந்த ஆதினங்கள் பிறந்திருக்கிறது. இரண்டாயிரம் மூவாயிரம் ஆண்டுகளாக இந்த சித்தாந்தம் தமிழகத்தில் இருக்கிறது. அப்படி இருக்கையில் புதிதாக என்ன சித்தாந்தத்தை 2022ல் இவர்கள் கொண்டுவர முயல்கிறார்கள். முதல்வர் இந்த விபரீத விளையாட்டுக்குத் துணை போகாமல் உடனடியாக ஆதினங்களுக்கு என்ன மரியாதை கொடுக்க வேண்டுமோ அதைக் கொடுக்க வேண்டும். என்னுடைய கோரிக்கை முதல்வரே இதை முன்னின்று நடத்த வேண்டும். அவருடைய கடமை இது'' என்றார்.