தமிழ்நாடு முழுக்க வரும் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் வா.புகழேந்தியைச் சந்தித்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து சில கேள்விகளை முன்வைத்தோம் அவர் அளித்த பதில்களின் சுருக்க வடிவம்.
“மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 90% இடங்களை திமுக கைப்பற்றும். மிகவும் கடினமாகப் போவது கோயம்புத்தூர். ஆனால், அங்கேயும் திமுக மாநகராட்சியைப் பிடித்துவிடும். மேற்குவங்கத்தில் மம்தா உள்ளாட்சித் தேர்தலில் மொத்தமாக வென்றார். அதேபோல், மாபெரும் வெற்றியை திமுக பெரும். இதனை மக்கள் மட்டும் தரப்போவதில்லை; மாமன்னர்கள் ஓ.பி.எஸும், இ.பி.எஸும் சேர்ந்தே இதனைத் தரப்போகிறார்கள். காரணம் பாஜகவுடனான கூட்டணி முறிவு பற்றித் தெளிவாகக் கூறாததே. பல இடங்களில் பாஜகவினர், அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கிறோம் என்றே வாக்கு கேட்கின்றனர். ஓட்டே இல்லாத பாஜக ஒரு 50, 100 வாக்குகளை வாங்கினால் அது அவர்களுக்குக் கொண்டாட்டம் தான். அதனைப் பெறுவதற்கு ஒ.பி.எஸ்., இ.பி.எஸ். துணை நிற்கிறார்கள்.
தேர்தல் நேரத்தில் எம்.ஜி.ஆர். பற்றிப் பேசுவார்கள் அவ்வளவுதான். இவர்களுக்கு உண்மையாக எம்.ஜி.ஆர். பற்றித் தெரியாது. ஒருவர் எம்.ஜி.ஆர். வேஷம் போட்டுக்கொண்டு எடப்பாடி காலில் விழுகிறார். அவர் (எடப்பாடி) என்ன செய்திருக்க வேண்டும். ‘நீ எம்.ஜி.ஆர். வேஷம் போட்டிருக்க; காலில் விழக்கூடாது’ எனச் சொல்லித் தூக்கிவிட்டிருக்க வேண்டும். ஆனால், அவர் செய்யவில்லையே.
அதிமுக தேர்தலில் தோற்கவேண்டும் எனச் சொல்லவில்லை. பாஜகவிடம் அடமானம் வைத்ததால் அந்த நிலை வரப்போகிறது என்கிறேன். தேர்தல் முடிந்ததும் கூட்டணி தொடரும் என்கிறார்கள். அதனால், பாஜக அதைச் சொல்லியே வாக்கு கேட்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம் அந்த இரட்டைத் தலைமைதான். அந்த இரட்டைத் தலைமை ஒழிந்துவிட்டால் அதிமுக மீண்டுவிடும். அதற்கு சாதாரண ஒரு தொண்டன் போதும்.
அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர். ஜெயலலிதா தற்போது மு.க.ஸ்டாலின் ஆகியோரை முதலமைச்சராகப் பார்த்துக்கொண்டிருக்கிறது தமிழ்நாடு. இது 50 வருடத் தொடர்ச்சி. இது அப்படியே நீடிக்க வேண்டும் என்றால் அதிமுக வலுப்பெற வேண்டும். அதைவிடுத்து பாஜகவை நிலை நிறுத்தினால்; சிறுபான்மையினரோ, தாழ்த்தப்பட்டோரா ஒரு ஓட்டுப் போடப்போவதில்லை. பிறகு எப்படி தமிழ்நாடு முழுக்க ஜெயிக்க முடியும். யார் ஓட்டுப் போடுவார். 9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தல் முடிவுதான் இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் முடிவும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.