Published on 22/06/2019 | Edited on 22/06/2019
திமுகவை சேர்ந்த கே.என்.நேரு, இன்னும் எத்தனை காலம்தான் காங்கிரஸுக்கு திமுக பல்லக்கு தூக்குவது என பேசியிருந்தார். இது திமுக, காங்கிரஸ் கூட்டணிக்குள் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு, நான் எனக்கு இருக்கும் செல்வாக்கால் தான் வெற்றி பெற்றேன் என்று எங்கேயும் கூறவில்லை.
மேலும் வரும் உள்ளாட்சி தேர்தலில் திமுக, காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்றும் கூறினார். இதனையடுத்து பேசிய கே.என்.நேரு, 'உள்ளாட்சித் தேர்தலில் அதிக தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடவேண்டும் என்று அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் கூறிவருகின்றனர். அதன் அடிப்படையிலேயே, மாவட்ட நிர்வாகிகள் கூறிய கருத்தைத் தான் நான் தெரிவித்தேன். தி.மு.க மாவட்டச்செயலாளராக இருக்கும் நான், எங்கள் கட்சி அதிக தொகுதிகளில் போட்டியிடவேண்டும் என்றுதான் விரும்புவேன். கூட்டணி குறித்து முடிவெடுக்கும் பொறுப்பில் நான் இல்லை. நான், வெறும் மாவட்டச் செயலாளர்தான்' என்று தெரிவித்தார்.