ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்ட ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை பல்வேறு பரபரப்புகளைக் கடந்து இன்று நடைபெறுகிறது. அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 77 பேர் போட்டியிட, இடைத்தேர்தல் களம் பிரச்சாரத்துடன் சூடுபிடித்த நிலையில், கடந்த 27 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முன்னணியில் உள்ளார்.
இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ''20 மாத கால திராவிட மாடல் ஆட்சிக்கு கிடைத்த மக்கள் அங்கீகாரம் இது. வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் இதைவிட மிகப்பெரிய வெற்றியை நிச்சயமாக வழங்குவார்கள். வரலாற்றில் பதிவாகக் கூடிய வெற்றியை தந்த ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி. இபிஎஸ் நாலாந்தரப் பேச்சாளர் போல் பேசியதற்கு மக்கள் நல்ல பாடம் தந்துள்ளனர். அயராது பாடுபட்ட அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள், கூட்டணி கட்சியினருக்கு நன்றி'' என்றார். அப்பொழுது செய்தியாளர் ஒருவரின், “சார் நீங்க தேசிய அரசியலுக்கு வர வேண்டும் என்கிறார்கள் சிலர்” என்ற கேள்விக்கு, ''நான் தேசிய அரசியலில் தான் இருக்கிறேன். யார் வெற்றிபெற்று பிரதமராக வேண்டும் என்பதை விட யார் பிரதமராக இருக்கக் கூடாது, யார் ஆட்சியில் இருக்கக் கூடாது என்பதுதான் இப்போதைக்கு எங்களுடைய கொள்கை'' என்றார்.