பாராளுமன்ற மக்களவையில் 03.12.2019 செவ்வாய்க்கிழமை மாலை 7 மணியளவில் நேரமில்லா நேரத்தில், காங்கிரஸ் கட்சி உறுப்பினரான திருநாவுக்கரசர் பேசினார்.
அப்போது அவர், 'இந்திய அளவில் சுமார் 30 கோடி இளைஞர்கள் படித்துவிட்டு வேலை கிடைக்காமல் உள்ளனர். மத்திய அரசு ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை தருவதாக கூறியதை நிறைவேற்றவில்லை.
வங்கிகளில் கல்விக் கடன் வாங்கியும், பெற்றோர்கள் நகைகளை, நிலத்தை அடமானம் வைத்தும் உடமைகளை விற்றும், பிள்ளைகளை படிக்க வைக்கிறார்கள். கடனை கட்ட முடியவில்லை, வேலையும் கிடைக்கவில்லை. சில இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். சிலர் தீவிரவாத அமைப்புகளில் சேரும் அவல நிலை ஏற்படுகிறது.
எனவே வேலை கிடைக்கும் வரை மேல்நிலைப் பள்ளி இறுதி வரை படித்து வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிந்துள்ள இளைஞர்களுக்கு தினம் ரூபாய் 100 வீதம் மாதம் ஒன்றுக்கு ரூ. 3000 மும், பட்டம், பட்ட மேற்படிப்பு, இதர படிப்பு படித்த இளைஞர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ. 5000 வீதமும் வேலை கிடைக்கும் வரை வழங்கிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசும், மாநில அரசும் சரிபாதியாக இச் செலவை ஏற்றுக் கொள்ளலாம்.
இளைஞர்களை காக்க உதவ மாதந்தோறும் வேலை கிடைக்காத இளைஞர்களுக்கான மாத உதவித் தொகை திட்டத்தை அறிவித்து வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு பேசினார்.