தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜூன் 11 மற்றும் 12 என இரண்டு நாள் பயணமாக சேலம் சென்றுள்ளார். அங்கு கலைஞரின் சிலையை திறந்து வைத்து ரூ. 2 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டப்பணிகளைத் துவக்கி வைக்கிறார். மேலும், 50 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.
இந்நிலையில் இன்று சேலத்தில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் ஒரு மருத்துவமனைக்கு ரூ. 1000 கோடி ஒதுக்குவதற்கு மனமில்லாமல் இன்று ஒரு ஆட்சி நடந்து கொண்டுள்ளது. பணத்தை ஏன் ஒதுக்க முடியவில்லை. பணியை ஏன் நிறைவேற்ற முடியவில்லை. இது தான் இன்று தமிழ்நாட்டு மக்களின் கேள்வி. என் கேள்வி மட்டுமல்ல. இந்த கேள்விக்கு நாளை தமிழ்நாடு வரும் அமித்ஷா பதில் சொல்ல வேண்டும். நான் முதலமைச்சராக அதை எதிர்பார்க்கிறேன்.
பாஜக தமிழ்நாட்டுக்கு கொடுத்ததெல்லாம் இந்தி திணிப்பு, சமஸ்கிருத திணிப்பு, நீட், மூன்று வேளாண் சட்டங்கள் மூலம் உழவர்கள் வாழ்வை பறித்தது, மாநில உரிமைகள் பறிக்கப்படுவது தான். மாநிலத்திற்கான நிதியை கொடுப்பதற்கு கூட மறுக்கிறார்கள். இது தான் அவர்கள் தமிழ்நாட்டுக்கு தீட்டிய திட்டங்கள். கேட்டால் நாங்கள் சோழர் காலத்து செங்கோலை வாங்கியுள்ளோம் எனச் சொல்வார்கள். அந்த வரலாறு எல்லாம் என்ன என்று இப்போது தெரியும். ஜெயலலிதா மறைவுக்கு பின் தோல்விகளை மட்டுமே பெற்ற கட்சிதான் அதிமுக. மூழ்கிக் கொள்ளும் இருவர் கைகோர்த்துக் கொள்வது போல் அதிமுகவும் பாஜகவும் உள்ளன.
அதிமுகவில் ஒருவருக்கு மத்திய அமைச்சர் பதவி தரப்பட இருப்பதாக பத்திரிகை ஒன்றில் சொல்லப்படுகிறது. இதைப் படித்ததும் எனக்கு கதை ஒன்று ஞாபகத்திற்கு வந்தது. ஒரு ஆத்துல திடீர்னு வெள்ளம் பெருக்கெடுத்து வந்தது. அப்போது பல பொருட்கள் அடிச்சிட்டு போகுது. கரையில இருந்த பொதுமக்கள் அந்த பொருட்கள்ல நமக்கு எதாவது அகப்படாதான்னு காத்துட்டு இருந்தாங்க. அப்போ கருப்பா பெருசா ஒன்று உருண்டு வந்தது. அத எடுக்குறதுக்கு பலருக்கும் போட்டி. ஒரு ஆள் அத கைப்பற்றிட்டார். அதுக்கு அப்புறம் தான் உருண்டு வந்தது கரடின்னு தெரிஞ்சது. இப்போது அந்த ஆள் அந்த கரடிய விடத் தயாராகிட்டார். ஆனா அந்த கரடி அந்த ஆள விடத் தயாரா இல்ல. அந்த ஆளும் கரடியும் போன்றது தான் அதிமுகவும் பாஜகவும். இது தான் கதை. மக்கள் வெள்ளத்தில் இவர்கள் இருவரும் அடித்துச் செல்லப்படுவார்கள் என்பது மட்டும் உறுதி” என்றார்.