/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_2353.jpg)
முன்னாள் அமைச்சரும், அதிமுக விழுப்புரம் மாவட்டச் செயலாளருமான சிவி சண்முகம் நேற்று விழுப்புரத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “திமுக அரசு எதிர்க்கட்சியை பழிவாங்கும் நோக்கத்தோடு மட்டுமே செயல்பட்டு வருகிறது. ஆட்சி பொறுப்பேற்று ஆறு மாதம் ஆன போதிலும் இன்னமும் அதிமுகவை தான் குறை சொல்லி வருகின்றனர். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு அரசு நிர்வாகம் மீது துளியும் கவனம் செலுத்தவில்லை. அதிமுக மீதான பழிவாங்கும் நடவடிக்கையை செய்து வருகிறது. அதை நாங்கள் சட்டரீதியாக சந்திக்க உள்ளோம்.
அரசு ஊழியர்கள் தயவு இல்லாமல் திமுக ஆட்சி அமைக்க முடியாது. இதை அவர்கள் மறந்துவிட்டனர். இன்று முதலமைச்சரின் கைக்கூலியாக லஞ்ச ஒழிப்புத்துறை செயல்பட்டுவருகிறது. முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்திக் கொண்டிருக்கும்போதே, லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை அதிகாரி கந்தசாமி முதலமைச்சரை சந்திக்கிறார். காரணம், வேலுமணியை கைது செய்ய வேண்டும் என்பதுதான் அவர்களின் இலக்கு. ஆனால், அதற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்பதால் வேலுமணி கைது செய்யப்படவில்லை.
இந்த அரசுக்கு ஒத்துழைக்காத அதிகாரிகள் மிரட்டப்படுகிறார்கள்; அச்சுறுத்தப்படுகிறார்கள். நேற்று முன்தினம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக இருந்த வெங்கடாசலம் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் மிகவும் நேர்மையான அதிகாரி. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், அவரை ராஜினாமா செய்யுமாறு வற்புறுத்தினார்கள். ஆனால், அவர் அதற்கு மறுத்துவிட்டதால் பின்னர் அவர் பதவி நீக்கம்செய்யப்பட்டவர் வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. பதினோரு லட்சம் பணம், 4 கிலோதங்கம் வைத்திருந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்குக்காக அதிகாரி வெங்கடாசலம் அச்சப்படவில்லை.
அவர் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. ஆனால், அவர் பகலில் தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு என்ன நடந்தது, அவரது தற்கொலைக்கு என்ன காரணம் என்பது மர்மமாக உள்ளது. கடந்த மாதம் பொதுப்பணித்துறை அதிகாரி வீட்டில் சோதனை நடைபெற்று இரண்டரை கோடி பணம் கைப்பற்றப்பட்டது. ஆனால், அவர் மீது மேல் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக அவருக்கு 10 நாளில் பதவி உயர்வு அளிக்கப்பட்டது. எதிர்கட்சிகள் கேள்வி கேட்ட பின்பு அவர் கைது செய்யப்படுகிறார். முன்னாள் அமைச்சர்கள் மீது குற்றம் சுமத்த வற்புறுத்தப்பட்டுள்ளார். அவர் மறுத்ததால் கைது செய்யப்பட்டுள்ளார். இப்படி முன்னாள் அரசு மீது குற்றம் சுமத்த வேண்டும் என்று வலியுறுருத்தப்பட்டு அதற்கு வெங்கடாச்சலம் மறுத்ததால் அதனால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கேள்வி எழுகிறது.
எப்போதெல்லாம் திமுகவினர் மீது குற்றம்சாட்டப்படுகிறதோ அப்போதெல்லாம் அதிகாரிகள் தற்கொலை சம்பவங்கள் நடைபெறுகிறது. மரக்காணம் ஒன்றியக் குழுத் தலைவர் தேர்தலில் அங்கு பணி செய்யும் வட்டார வளர்ச்சி அலுவலர் மிரட்டப்பட்டு தோல்வி அடைந்தவரை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். இந்த அரசின் மீதும் காவல்துறை மீதும் நம்பிக்கை இல்லாததால் மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் வெங்கடாசலத்தின் மர்ம மரணத்திற்கான காரணத்தை சி.பி.ஐ. விசாரணை செய்ய வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். இந்த அரசால் அதிகாரிகள் மிரட்டப்படுகிறார்கள். அதனால் அவர்களை தற்கொலைக்கு தூண்டுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)