சிலை கடத்தல் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசு மீது சந்தேகத்தை உருவாக்குகிறது என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
தமிழகத்தில் கோயில் சிலைகள் கடத்தல் தொடர்பான வழக்குகளை சிபிஐக்கு மாற்ற எடப்படி பழனிசாமி அரசு முடிவு செய்திருப்பது உள்நோக்கம் கொண்டது. சிலை கடத்தல் சம்பவம் தொடர்பாக ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் மிகவும் சரியாக விசாரணை செய்து வருகிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விசயம். ஏற்கனவே இந்த அரசு அவரை மாற்றிட பலமுறை முயற்சி செய்தது. நீதிமன்றம் தலையீட்டால் இதுவரை மாற்றாமல் பொன்.மாணிக்கவேல் தலைமையில் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. இது அரசாங்கத்தின் உள்நோக்கத்தையே காட்டுகிறது. அரசாங்கத்தின் மீது ஒரு சந்தேகத்தை உருவாக்குகிறது. இப்பொழுது இந்த அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது என்றாலும் நீதிமன்றம் நல்ல முடிவு எடுக்கும் என்பதுதான் எனது கருத்து.
காணாமல்போன சிலைகளை எல்லாம் நல்ல விதமாக சிறப்பாக கண்டுபிடித்துக்கொண்டிருக்கும் பொன்.மாணிக்கவேலை, அவரது பதவிக்காலம் முடிந்தாலும்கூட பதவி நீட்டிப்பு செய்து செயல்பட வைத்தால்தான் காணாமல் போன எல்லா சிலைகளையும் மீட்டெக்க முடியும். எத்தனையோ அதிகாரிகளை கண்டுபிடித்து கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறார். பாரபட்சமற்ற முறையில் நேர்மையாக செயல்படுவதால்தான் நீதிமன்றமே பொன்.மாணிக்கவேலுக்கு பாதுகாப்பு கொடுத்திருக்கிறார்கள். இவ்வாறு கூறியுள்ளார்.