தலித் சமூகத்திற்கு எதிரான தீண்டாமை மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் தலைவிரித்தாடுகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இது குறித்த புகார்கள் பரவலாக எதிரொலிக்கின்றன. சமூகப் பிரச்சனைகள் குறித்து பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் கவனத்துக்கொண்டு வரும் வகையில் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார் திமுக எம்.பி. கனிமொழி. அந்த வகையில், உயர்கல்வி நிறுவனங்களில் நிலவும் தீண்டாமை குறித்து 16.07.2019 செவ்வாய் அன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார் கனிமொழி!
அவர் பேசும் போது, “அண்மைக் காலமாக உயர் கல்வி நிறுவனங்களில் பரவலாக தீண்டாமைக் கொடுமைகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது குறித்து அரசு நடவடிக்கை ஏதும் எடுத்திருக்கிறதா? பட்டியல் இனத்தோர், பழங்குடியினருக்கு எதிரான இதுபோன்ற தீண்டாமைக் கொடுமைகள் குறித்தான புகார்களை விசாரிப்பதற்கு தனி குழுவோ, தனிப் பிரிவோ ஏற்படுத்தப்பட்டுள்ளதா?” என்றார்.
கனிமொழி எம்.பி.யின் கேள்விகளுக்கு மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷங்க் பதிலளிக்கையில்,
“உயர் கல்வி நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள் ஆகியவை தன்னாட்சி பெற்ற அமைப்புகள். அவை தத்தமது சொந்த கொள்கைக் கோட்பாடுகள், சட்டதிட்டங்களுடன் இயங்கி வருகின்றன. பல்கலைக் கழக விதிகள் சாதி, மத ரீதியாக தீண்டாமை பின்பற்றுவதை அனுமதிப்பதில்லை. மேலும் மாணவர்களுக்கு எதிரான அனைத்து வகை துன்புறுத்தல்கள், தீண்டாமைக் கொடுமைகளை தடுத்து நிறுத்திடவும், அதற்கேற்ற நிர்வாக முடிவுகளை எடுக்கவும் உயர் கல்வி நிறுவனத் தலைமைகள் தகுதி வாய்ந்தவை.
2017-18 கல்வியாண்டில் இந்தியா முழுவதும் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு எதிரான தீண்டாமைப் புகார்கள் 66, பழங்குடியின மாணவர்களுக்கு எதிரான தீண்டாமைப் புகார்கள் 6 என்ற அளவில் பதிவாகியிருப்பதாக பல்கலைக் கழக மானியக் குழு தெரிவிக்கிறது.
இந்தப் புகார்கள் மீது அந்தந்த பல்கலைக் கழக நிர்வாகங்கள் தங்களது அமைப்பு விதிகளின்படி நடவடிக்கை எடுத்திருக்கின்றன. அகில இந்திய தொழில் நுட்பக் கவுன்சில் தலைமையிலான உயர் கல்வி நிறுவனங்களில் இதுபோன்ற தீண்டாமைக் கொடுமைகள் நிகழ்ந்ததாக தகவல் ஏதுமில்லை.
மத்திய அரசும், பல்கலைக் கழக மானியக் குழுவும் அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய அரசு உதவிபெறும் உயர் கல்வி நிறுவனங்களுக்கும் தீண்டாமைக் கொடுமையை தடுத்து நிறுத்தும்படி தொடர்ந்து அறிவுறுத்திக் கொண்டே வருகின்றன.
கடந்த 2019 ஜூன் 26 ஆம் தேதி அனைத்துப் பல்கலைக் கழக துணைவேந்தர்களுக்கும் ஓர் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது. அதன்படி எஸ்சி, எஸ்டி, ஒபிசி வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள், மற்ற ஊழியர்களிடம் இருந்து பெறப்படும் தீண்டாமை தொடர்பான புகார்களை விசாரிப்பதற்காக தனி குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
எந்தவொரு பிரிவினரின் பாகுபாடு மற்றும் துன்புறுத்தல்களை சரிபார்க்கவும், குறை தீர்க்கும் பொறிமுறையை வலுப்படுத்தவும், பல்கலைக்கழக மானியக் குழு(2012 ) விதிமுறைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு உயர் கல்வி நிறுவனத்திலும் சம வாய்ப்புக்கான மையங்களை அமைப்பதன் மூலம் பட்டியல் சாதி
மற்றும் பட்டியல் பழங்குடியின மாணவர்களின் முன்னேற்றத்திற்கு பல்கலைக் கழக மானியக் குழுவின் விதிமுறைகள் உறுதிசெய்கின்றன.
பல்கலைக் கழகங்களில் இருக்கும் பின்தங்கிய குழுக்களுக்கான கொள்கைகள் மற்றும் திட்டங்களை திறம்பட செயல்படுத்துவதை மேற்பார்வையிடுவதும், கல்வி, நிதி, சமூக மற்றும் பிற விஷயங்களில் வழிகாட்டுதலையும் ஆலோசனையையும் வழங்குவதும், வளாகத்திற்குள் உள்ள பன்முகத்தன்மையை மேம்படுத்துவதுமே பல்கலைக் கழக மானியக் குழுவின் நோக்கம் ஆகும்.
எஸ்சி / எஸ்டி மாணவர்களின் நலன்களைப் பாதுகாக்கும் நோக்கில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் எஸ்சி / எஸ்டி மையங்களை நிறுவவும் யுஜிசி ஒப்புதல் அளித்துள்ளது.
ரமேஷ் பொக்ரியால் நிஷங்க்
இதுமட்டுமல்ல, எஸ்சி / எஸ்டி மாணவர்களுக்கு அவர்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து அதற்கேற்ப ஆலோசனை வழங்குதல், கல்வி மட்டுமல்ல, தனிப்பட்ட, உளவியல் மற்றும் குடும்ப தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண மாணவர் ஆலோசகர்களை நியமித்தல், விளையாட்டு மற்றும் கூடுதல் பாடத்திட்ட நடவடிக்கைகளை வழங்குதல், ஆலோசனை மையங்களை அமைத்தல், ஹெல்ப்லைன் வழங்குதல் ஆகிய நடவடிக்கைகளும் பல்கலைக் கழக மானியக் குழுவால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சாதி, மதம் மற்றும் பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுவதாக புகார் வந்தால், அவசர நடவடிக்கை எடுக்க ஒழுங்கு நடவடிக்கைக் குழுவை அமைத்தல் போன்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
அகில இந்திய தொழில் நுட்பக் கவுன்சிலின் கீழ் இயங்கும் உயர் கல்வி நிறுவனங்களில் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு எதிரான பாகுபாடுகளையும், கொடுமைகளையும் தடுப்பதற்கு அனைத்து கல்வி நிறுவனங்களிலும் எஸ்சி எஸ்டி கமிட்டி அமைக்க எஸ்சி. எஸ்டி சட்டம் 1989இன் கீழ் வழி வகை செய்யப்பட்டிருக்கிறது.
அகில இந்திய தொழில் நுட்பக் கவுன்சிலின் கீழ் இயங்கும் அனைத்து கல்வி நிறுவனங்களும் தங்களது நிறுவனத்தில் பாகுபாடு தொடர்பாக புகார்கள் பெறப்பட்டால், அதுபற்றிய விவரங்களையும் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றிய விவரங்களையும் மாதமாதம் ஆன்லைனில் பதிவேற்ற செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது, ஒருவேளை உயர் கல்வி நிறுவன நிர்வாகங்களின் மீது இத்தகைய புகார்கள் எழுந்தால், அவை அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சிலின் பொதுக் குறைத் தீர்க்கும் மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அதன் மீதான நடவடிக்கை கோரப்படும். அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சிலின் செயல்முறைக் கையேட்டின் விதிகளுக்கு மாறாக செயல்பட்ட சில கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.